ஆசிரியர்களிடத்தில்‌ உளவியல்‌ அறிவின்‌ தேவைப்பாடு .




ஆசிரியர்களிடத்தில்‌ உளவியல்‌ அறிவின்‌ தேவைப்பாடு

உலகிலுள்ள அனைத்துத்‌ தொழில்களைக்‌ காட்டிலும்‌ உன்னத தொழிலாக ஆசிரியர்‌ தொழில்‌ விளங்குவதோடு சேவை மனப்பான்மையுடன்‌ கூடிய தொழிலாகவும்‌ பார்க்கப்படுகின்றது.

மாணவர்களிடத்தில்‌ காணப்படுகின்ற அறியாமையை நீக்கி நல்லொழுக்கங்களையும்‌, நற்பண்புகளையும்‌ வளர்த்தெடுத்து நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துத்‌ தருகின்ற உன்னத சேவையை ஆசிரியர்கள்‌ மேற்கொள்கின்றனர்‌. இத்தகைய ஆசிரியரது பணியானது பிள்ளையின்‌ உளச்‌ செயற்பாட்டுடன்‌ தொடர்புடையதாகக்‌ காணப்படுவதனால்‌ பாடசாலையில்‌ கற்பிக்கின்ற ஆசிரியர்கள்‌ மாணவர்களை அறிந்து கொள்ளக்கூடிய உளவியல்‌ அறிவினைப்‌ பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்‌.

ஒரு மாணவனின்‌ கல்வி முன்னேற்றத்தில்‌ உளவியல்‌ அதிக பங்களிப்பினைச்‌ செய்கின்றது. உளவியல்‌ காரணிகளில்‌ குழப்பங்கள்‌ ஏற்படின்‌ அது மாணவனின்‌ கல்வியில்‌ எதிர்மறையான தாக்கத்தினையே ஏற்படுத்தும்‌ என பல உளவியலாளர்கள்‌ கூறுகின்றனர்‌.

ஆகவே ஆசிரியர்கள்‌ கல்விச்‌ செயற்பாடுகளை வகுப்பறையில்‌ மேற்கொள்வதற்கு முன்னர்‌ உளவியல்‌ அறிவைப்‌ பெற்றிருக்க வேண்டும்‌. மேலும்‌ மாணவர்களின்‌ உளவியலைப்‌ புரிந்து அதற்கேற்ப கல்வியை ஆசிரியர்‌ வழங்கும்‌ போது மாணவர்களிடத்தே சிறந்த பெறுபேற்றினையும்‌ பெறக்கூடியதாக இருக்கும்‌. சுவிட்சலாந்து நாட்டைச்‌ சேர்ந்த உளவியலாளரான பெஸ்டலொசி “மாணவர்களுக்கு கல்வியை வழங்க முன்னர்‌ அவர்களைப்‌ பற்றிய ஆய்வை நடத்த வேண்டும்‌ என்றும்‌ கல்வி பயனுடையதாக வேண்டுமாயின்‌ அது மாணவனின்‌ உள்ளார்ந்த ஆற்றல்கள்‌ என்பவற்றின்‌ அடிப்படையில்‌ அமைய வேண்டூம்‌” என்றும்‌ குறிப்பிடுகின்றார்‌.

அவ்வகையில்‌ ஒரு வகுப்பறையை எடுத்துக்‌ கொண்டோமானால்‌ அங்கு காணப்படுகின்ற அனைத்து மாணவர்களும்‌ ஒரே விதமான இயல்புகள்‌, நடத்தைகள்‌, விருப்பு வெறுப்புக்கள்‌ என்பவற்றைக்‌ கொண்டிருக்க மாட்டார்கள்‌. வகுப்பிலுள்ள ஒவ்வொரு மாணவரும்‌ தனித்தன்மை வாய்ந்தவர்கள்‌ என்பதனால்‌ அவர்களது அறிவு, திறன்‌, மனப்பாங்கு, ஆளுமை என்பன ஒருவரிலிருந்து வேறுபட்டதாகக்‌ காணப்படும்‌. எனவே ஒரு ஆசிரியர்‌ தனது வகுப்பிலுள்ள மாணவர்களின்‌ இயல்புகள்‌, நடத்தைகள்‌, விருப்பு வெறுப்புக்களை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்‌. குறிப்பாக மாணவர்கள்‌ ஒவ்வொருவரும்‌ எவ்வாறான நிலமையில்‌ காணப்படுகின்றார்கள்‌ என்பதை அறிந்து செயற்படக்கூடியவராக ஆசிரியர்‌ காணப்படவேண்டும்‌.

சாதாரணமாக ஒரு வகுப்பறையில்‌ மீத்திறன்‌ உடையோர்‌, மெல்லக்‌ கற்போர்‌, கற்றலில்‌ பின்தங்கியோர்‌. பார்வைக்‌ குறைபாடூுடையோர்‌, செவிப்புலக்‌ குறைபாடுடையோர்‌ போன்ற பல்வகைப்பட்ட மாணவர்கள்‌ காணப்படலாம்‌. இவ்வாறு காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில்‌ ஆசிரியர்‌ ஒரே விதமான கற்பித்தலை முன்னெடுத்துச்‌ செல்ல முடியாது.

ஒவ்வொரு மாணவரினுடைய நிலையை அறிந்து அதற்கேற்ற விதத்திலே கற்பித்தல்‌ செயற்பாடுகளை முன்னெடுத்துச்‌ செல்ல வேண்டூம்‌. எடூத்துக்காட்டாக பார்வைக்‌ குறைபா௫டைய மாணவர்கள்‌ மற்றும்‌ செவிப்புலக்‌ குறைபாடுடைய மாணவர்களை வகுப்பறையில்‌ முன்வரிசையில்‌ அமர்த்திக்‌ கற்பிப்பதுடன்‌ அவர்களுக்கேற்ற விதத்தில்‌ கற்பித்தல்‌ முறைகளையும்‌ கையாளக்கூடியவராகக்‌ காணப்பட வேண்டும்‌. இவ்வாறு தனது வகுப்பிலுள்ள்‌ மாணவர்களின்‌ நிலையை அறிந்து அதற்கேற்ற விதத்தில்‌ கற்பித்தல்‌ செயற்பாட்டை முன்னெடுத்துச்‌ செல்வதற்கு மாணவர்கள்‌ பற்றிய உளவியல்‌ சார்ந்த அறிவு தேவைப்படுகின்றது.

இன்றைய காலத்தில்‌ பெரும்பாலான ஆசிரியர்கள்‌ மாணவர்களின்‌ உடல்‌, உளம்‌ சார்ந்த நிலமையைக்‌ கருத்தில்‌ கொள்ளாது அனைத்து மாணவர்களுக்கும்‌ சாதாரணமான முறையில்‌ பொதுவான கற்பித்தலை மேற்கொள்பவர்களாகக்‌ காணப்படுகின்றனர்‌. இவ்வாறு செய்வதன்‌ மூலமாக ஏனைய விசேட தேவை கொண்ட மாணவர்களின்‌ கற்றல்‌ செயற்பாடுகள்‌ பாதிப்படைவதோடுூ அவர்களின்‌ கற்றல்‌ ஆர்வமும்‌ குறைவடையும்‌. எனவே ஆசிரியர்கள்‌ இது தொடர்பில்‌ அவதானத்துடன்‌ செயற்பட வேண்டியது அவசியமாகும்‌.

அத்தோடு ஆசிரியர்‌ வகுப்பிலுள்ள மாணவர்கள்‌ ஒவ்வொருவரினதும்‌ கு௫ம்ப சூழல்‌, பொருளாதார பின்னணி பற்றியும்‌ அறிந்திருக்க வேண்டும்‌. ஏனெனில்‌ இவை மாணவர்களின்‌ கல்வியில்‌ நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவனவாகும்‌. குறிப்பாக வீட்டில்‌ பெற்றோரினது அன்பும்‌ ஆதரவும்‌ ஒரு பிள்ளைக்கு முழுமையாகக்‌ கிடைக்கப்‌ பெறுகின்ற சந்தர்ப்பத்தில்‌ அப்‌ பிள்ளையிடத்தில்‌ நேர்‌ மனவெழுச்சிகள்‌ காணப்படுவதோடு கற்றலிலும்‌ சிறப்பாக ஈடுபடக்கூடியதாக இருக்கும்‌. பெற்றோரின்‌ அக்கறையினால்‌ அப்‌ பிள்ளையினுடைய பாடசாலை வரவும்‌ உயர்வாகக்‌ காணப்படூம்‌.

இதுவே தாய்‌, தந்தையின்‌ அரவணைப்புக்‌ கிடைக்கப்‌ பெறாத நிலை காணப்படுமாயின்‌ பிள்ளையின்‌ மனநிலை பாதிக்கப்பட்டு அப்‌ பிள்ளையால்‌ கற்றல்‌ செயற்பாடுகளில்‌ சிறப்பாக ஈடுபட முடியாத நிலை காணப்படும்‌. குறிப்பாக தாய்‌, தந்‌ைத இருவரும்‌ வேலைக்குச்‌ செல்கின்ற நிலை, வீட்டில்‌ தாய்‌ தந்தைக்கிடையே இடம்பெறுகின்ற வாக்குவாதங்கள்‌, முரண்பாடுகள்‌ என்பன பிள்ளைகளிடத்தில்‌ மன ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும்‌. இது பிள்ளையிடத்தில்‌ கோபம்‌, வெறுப்பு போன்ற எதிர்‌ மனவெழுச்சிகளை தோற்றுவித்து கற்றல்‌ செயற்பாட்டில்‌ பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும்‌.

எனவே ஆசிரியர்‌ ஒருவர்‌ தனது வகுப்பிலுள்ள மாணவர்களின்‌ குட௫ம்பப்‌ பின்னணியை அறிந்து அதற்கேற்ற விதத்தில்‌ செயற்படக்‌ கூடியவராகக்‌ காணப்பட வேண்டும்‌. சிறந்த குடும்ப சூழல்‌ அமையப்‌ பெறாத மாணவர்களுக்கு அன்பையும்‌, அரவணைப்பையும்‌ வழங்க வேண்டியது ஆசிரியரின்‌ கடமையாகும்‌. இத்தகைய மாணவர்களை நல்வழிப்படுத்தக்கூடிய வகையில்‌ ஆலோசனைகளையும்‌, வழிகாட்டல்களையும்‌ ஆசிரியர்‌ வழங்க வேண்டும்‌. அதே போல பெற்றோருடனும்‌ இது பற்றிக்‌ கலந்துரையாடி சிறந்த குடும்ப சூழலை உருவாக்கிக்‌ கொடுக்க வேண்டும்‌.

ஒரு மாணவன்‌ பாடசாலைக்கு வருகை தருவதில்‌ ஒழுங்கீனம்‌ காணப்படூமாக இருந்தால்‌ அதில்‌ அவனது குட௫ம்பப்‌ பின்னணி சார்ந்த பல்வேறு விடயங்கள்‌ செல்வாக்குச்‌ செலுத்தலாம்‌.

இவற்றை அறியாமல்‌ அவனுக்குத்‌ தண்டனை வழங்குவது அம்‌ மாணவனுக்கு மேலும்‌ மனரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும்‌. எனவே ஆசிரியர்‌ மாணவனின்‌ இவ்வாறான நடத்தைக்கு காரணம்‌ என்ன என்பதை அறிந்து அதனைச்‌ சீர்செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்‌. அத்தோடு மாணவர்களுடைய கு௫ம்பத்தின்‌ பொருளாதார பின்னணி தொடர்பாகவும்‌ அறிந்து வைத்திருக்க வேண்டும்‌. குடும்ப வறுமையும்‌

மாணவர்களின்‌ கற்றலுக்குத்‌ தடையாகக்‌ காணப்படலாம்‌. எனவே வகுப்பில்‌ வறுமைக்கோட்டிற்கு கீழ்‌ காணப்படுகின்ற மாணவர்களை அடையாளம்‌ கண்டு அவர்களின்‌ கல்விக்கு தன்னால்‌ இயன்ற உதவிகளைப்‌ பெற்றுக்‌ கொடுக்கக்கூடியவராக ஆசிரியர்‌ காணப்பட வேண்டும்‌. சமூகத்திலுள்ள செல்வந்தர்கள்‌, பழைய மாணவர்‌ சங்கம்‌ போன்றவற்றினூடாக மாணவர்களின்‌ கல்விக்கான உதவிகள்‌ மற்றும்‌ வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக்‌ கொடுக்க வேண்டும்‌.

ஒரு மாணவனின்‌ திடீர்‌ மாற்றம்‌, கற்றலில்‌ ஏற்படும்‌ பின்னடைவு என்பவை பற்றி தூர நோக்குடன்‌ சிந்திப்பதற்கு உளவியல்‌ அறிவு தேவைப்படுகின்றது. எடுத்துக்காட்டாக வகுப்பில்‌ நன்றாகப்‌ படித்து சிறந்த புள்ளிகளைப்‌ பெற்று வந்த மாணவன்‌ ஒருவன்‌ திடீரென கல்வியில்‌ பின்னடைவை சந்திக்கின்றான்‌ என்றால்‌ அதற்கு அம்மாணவன்‌ சார்ந்த தனிப்பட்ட விடயங்கள்‌ பலவும்‌ காரணமாக இருக்கலாம்‌. எனவே அவை பற்றி அறிந்து மாணவனை நல்வழிப்படூத்துவதற்கும்‌ ஆசிரியருக்கு உளவியல்‌ பற்றிய அறிவு உதவி புரிவதாகக்‌ காணப்படுகின்றது.

ஒரு ஆசிரியர்‌ தாய்‌ அல்லது தந்‌தை ஸ்தானத்திலிருந்து மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டியது அவசியமாகும்‌. ஒரு வகுப்பில்‌ முப்பது மாணவர்கள்‌ காணப்பட்டால்‌ அம்‌ முப்பது மாணவர்களுக்கும்‌ ஒரு நல்ல தாயாக அன்பையும்‌ அரவணைப்பையும்‌ வழங்குவதோடு ஒரு நல்லாசானாக அறிவையும்‌, வழிகாட்டலையும்‌ வழங்க வேண்டியது அவசியமாகும்‌. ஒரு தாய்‌ எப்படித்‌ தான்‌ பெற்ற அனைத்துப்‌ பிள்ளைகளையும்‌ சமமாகப்‌ பார்ப்பாரோ அதே போல ஒரு நல்லாசான்‌ தனது வகுப்பிலுள்ள அனைத்துப்‌ பிள்ளைகளிடத்திலும்‌ எவ்வித பாரபட்சமும்‌ இல்லாது சமனாக அனைவரையும்‌ வழிநடத்த வேண்டும்‌.

ஆசிரியர்‌ தனது பிள்ளைகளாகிய மாணவர்களது விருப்பு வெறுப்புக்களை அறிந்து அவற்றுக்கு முக்கியத்துவம்‌ கொடுக்க வேண்டும்‌. அவ்வகையில்‌ பார்த்தோமானால்‌ வகுப்பிலுள்ள
ஒவ்வொரு பிள்ளைக்கும்‌ ஒவ்வொரு விருப்பும்‌, திறமையும்‌ காணப்படும்‌. ஒரு மாணவன்‌ சித்திரம்‌ வரைவதில்‌ ஆர்வம்‌ உடையவனாகக்‌ காணப்படுூவான்‌, ஒரு மாணவன்‌ கவிதை
எழுதுவதில்‌ ஆர்வம்‌ உடையவனாகக்‌ காணப்படுவான்‌. இன்னுமொரு மாணவன்‌ விளையாட்டில்‌ ஆர்வமுடையவனாகக்‌ காணப்படுவான்‌.

 எனவே ஆசிரியர்‌ ஒவ்வொரு மாணவனுடைய
விருப்பையும்‌, ஆர்வத்தையும்‌ அறிந்து அதில்‌ மாணவன்‌ தனது திறமையை வெளிப்படுத்துவதற்கான ஊக்குவிப்பை வழங்க வேண்டும்‌. படிப்பில்‌ மாத்திரம்‌ மாணவர்கள்‌
சிறப்பாக ஈடுபட்டால்‌ போதுமென்ற மனநிலையினை ஆசிரியர்‌ கொண்டிருக்காமல்‌ மாணவர்களது திறமைக்கும்‌, விருப்பத்திற்கும்‌ முக்கியத்துவமளித்து அதில்‌ மாணவர்கள்‌ முன்னேறிச்‌ செல்வதற்கான உந்துசக்தியை வழங்க வேண்டும்‌.

இன்றைய காலத்தில்‌ பெரும்பாலான ஆசிரியர்களின்‌ எண்ணப்பாடு “மாணவர்கள்‌ பரீட்சையில்‌ சிறந்த பெறுபேறுகளைப்‌ பெற வேண்டும்‌” என்பதாகவே காணப்படுகின்றது. மாணவர்களின்‌
விருப்பம்‌, ஆர்வம்‌ என்பவற்றைக்‌ கருத்தில்‌ கொள்ளாத போக்கு காணப்படுகின்றது. ஒரு மாணவன்‌ படிப்பில்‌ ஆர்வமில்லாது விளையாட்டில்‌ ஆர்வத்துடன்‌ செயற்படூவானாக இருந்தால்‌
அவனை மற்றைய மாணவர்களோடு ஒப்பிட்டு மட்டம்‌ தட்டிப்‌ பேசுகின்ற நிலைப்பாடு காணப்படுகின்றது. இங்கு ஆசிரியர்கள்‌ ஒன்றை நினைவில்‌ கொள்ள வேண்டும்‌.

எல்லோரிடத்திலும்‌ ஒரே திறமையும்‌, ஆற்றல்களும்‌ காணப்பட மாட்டாது. ஒவ்வொருவரும்‌ தனியாள்‌ வேறுபாடுகளைக்‌ கொண்டவர்கள்‌. எனவே அவரவரின்‌ விருப்பத்திற்கும்‌, திறமைக்கும்‌
முதலிடம்‌ கொடுக்க வேண்டியதன்‌ அவசியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்‌. விளையாட்டில்‌ ஒரு மாணவன்‌ ஆர்வத்துடன்‌ ஈடுபடுவானாக இருந்தால்‌ அதில்‌ மாணவனை
எவ்வாறு முன்னேற்றலாம்‌ என்றுதான்‌ பார்க்க வேண்டும்‌. இவ்வாறு மாணவர்களின்‌ விருப்பங்களுக்கு முதன்மை அளிப்பதுடன்‌ துறை மற்றும்‌ பாடங்களைத்‌ தெரிவு செய்வதிலும்‌ பிள்ளையின்‌ விருப்பத்திற்கேற்ப செயற்படுவதற்கு விட வேண்டும்‌.

எனவே ஆசிரியர்‌ மாணவர்களின்‌ உளத்‌ தேவைகளை அறிந்து அதற்கேற்ப கற்றல்‌ கற்பித்தல்‌ செயற்பாடுகளை முன்னெடுத்துச்‌ செல்வாராக இருந்தால்‌ மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்துக்‌ கொடுக்க முடியும்‌ என்பதில்‌ ஐயமில்லை.


நித்தியானந்தம்‌ - ஹக்சனா,
கல்வியியல்‌ சிறப்புக்‌ கற்கை,
இறுதியாண்டு மாணவி,
கல்வி, பிள்ளை நலத்‌ துறை,
கிழக்குப்‌ பல்கலைக்கழகம்‌.