சூறாவளியாக மாறிய ஆழ்ந்த தாழமுக்கம் !



கடந்த சில நாட்களாக ஆழ்ந்த தாழமுக்கம் சூறாவளியாக மாறும், மாறாது என மாறி மாறி பல முன்னறிவிப்புகள் செய்யப்பட்டிருந்தது.

தற்போது இது சூறாவளியாக வலுவடைந்து உள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நான் ஏற்கனவே கடந்த 19ஆம் திகதி முதல் இடையிடையே குறிப்பிட்டது போல் இதற்கு Saudi Arabia நாட்டினால் Fengal (Pronounced as Feinjal) என்னும் பெயரும் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது வடக்கு-வடமேற்கு திசையில் கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 13km/h வேகத்தில் நகர்ந்து, தற்போது சூறாவளியாக வலுவடைந்து, அதே பிரதேசத்தில் காணப்படுகின்றது. (11.2N, 82.2E).

இது தற்போது திருகோணமலையிலிருந்து வடக்கு-வடகிழக்காக 310km தூரத்திலும்

நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்காக 260km தூரத்திலும்,

புதுச்சேரியில் இருந்து கிழக்கு-தென்கிழக்காக 270km தூரத்திலும்,

சென்னையிலிருந்து தென்கிழக்காக 200km தூரத்திலும் காணப்படுகின்றது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிராந்தியத்திற்கு இடையில் காரைக்கால் பகுதிக்கும் மகாபலிபுரம் பகுதிக்கும் இடையே புதுச்சேரிக்கு அருகாமையில் ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் வீசும் காற்றின் வேகமானது 70km/h - 80km/h வரை காணப்படும்.

இதன் காரணத்தினால் வடக்கு, வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளும் மேகமூட்டமாக காணப்படுவதுடன், இப் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.