பாடசாலை கிரிக்கெட் போட்டிகளின் போது விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
தங்கள் பாடசாலையின் கௌரவத்தைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் கருத்து வௌியிடுகையில்,
"இப்போதெல்லாம், நாட்டில் பாடசாலை கிரிக்கெட் போட்டிகள் மிகவும் பரபரப்பாக இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு மீண்டும் ஒருமுறை அறிவுறுத்த வேண்டிய அவசியத்தை நாங்கள் காண்கிறோம்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற துயரமான சம்பவங்களை நாம் அனைவரும் அறிவோம். உயிரிழப்புகள், கடுமையான விபத்துக்கள், வன்முறை சம்பவங்கள் போன்ற விடயங்களை குறிப்பிடலாம்.
இது தொடர்பில் பொலிஸார் அவதானம் செலுத்தி வருகின்றனர். எதிர்வரும் காலங்களில், போக்குவரத்து நெரிசல்கள், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், கவனக்குறைவாக வாகனம் செலுத்துதல் மற்றும் அங்கீகரிக்கப்படாத பயணிகளை ஏற்றிச் செல்வது போன்ற வீதி போக்குவரத்து குற்றங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருப்பார்கள் என்று நம்புகிறோம்.
போட்டி ஏற்பாட்டாளர்கள் சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவில் உள்ள பொலிஸாரை சந்தித்து ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதனூடாக இந்த செயல்பாடுகளை இடையூறு இல்லாமல் மேற்கொள்ள முடியும். உங்கள் பாடசாலையின் கெளரவத்தை பாதுகாக்க நீங்கள் அனைவரும் செயற்படுதல் அவசியமாகும்"