
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் புதன்கிழமை (12) தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது இரு தொகுதி அமைப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்ன தொடர்பில் கூறிய போது ரணில் விக்கிரமசிங்க கோபமாக அவர்களுக்கு பதிலளித்தார்.
தொகுதி அமைப்பாளர் ஒருவருக்கு நியமனக் கடிதத்தை வழங்கிய போது அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பேச முயற்சித்த போதிலும், அவர் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை. 'ராஜித சேனாரத்ன வர முன்னர் நாம் தனியாகவே அனைத்து பணிகளையும் முன்னெடுத்தோம். தற்போது அவருக்கு மாத்திரம் முன்னுரிமையளிப்பது தவறாகும்.' என குறித்த தொகுதி அமைப்பாளர் கூறினார். எவ்வாறிருப்பினும் அதற்கு பதிலளிக்காத ரணில், அவரை சென்று அமருமாறு கூறினார்.
எனினும் அங்கு அமர்ந்திருந்த மேலும் இருவர் எழுந்து, கருத்துக்களை தெரிவிக்க முயற்சித்த போதிலும், அவர்களையும் அமருமாறு ரணில் கூறினார். அவர்கள் தொடர்ந்தும் பேச முயற்சித்தமையால் சற்று கடுந்தொனியில், 'அமருமாறு கூறினால் தயவு செய்து அமருங்கள்' என்று மீண்டும் மீண்டும் கூறினார். இதன் போது ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்தன அவர்களின் அருகில் சென்று அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தார். எனினும் அவர்கள் அங்கிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.