காத்தான்குடியில் இரண்டு பிரபல ஐஸ் போதைப்பொருள் வியாபாரிகள் உட்பட மூவர் கைது



மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி மற்றும் காங்கேயனோடை பகுதிகளில் நேற்று (29) இரவு பொலிஸார் மேற்கொண்ட திடீர் தேடுதல் நடவடிக்கைகளின்போது பிரபல ஐஸ் வியாபாரிகள் உட்பட மூவர் பெருமளவு ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பரீனாஸ் வீதியில் 2,350 மில்லி கிராம் போதைப்பொருளுடன் ஒரு ஐஸ் வியாபாரியும் காங்கேயனோடை ஈரான் சிட்டி பகுதியிலிருந்து 2,300 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மற்றொரு ஐஸ் வியாபாரியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை காங்கேயனோட ஈரான் சிட்டி பகுதியிலிருந்து 1085 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இன்னுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் 36, 35, 40 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் போதை ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இந்த மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன. அதன் ஒரு கட்டமாகவே இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.