இவ்வாண்டில் 2138 இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள் - 45 பேர் குற்றவாளிகளென அடையாளம்


இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த ஆண்டில் 2138 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் 45 பேர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் ஆம் திகதி முதல் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 44 விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்தது.

இதன்போது ஊழல் மோசடி குற்றச்சாட்டில் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 8 பேர் பொலிஸ் உத்தியோகத்தர்களாவர்.

இதனிடையே கடந்த 6 மாதங்களில் இலஞ்சம், ஊழல், சொத்துக்கள் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்தாமை மற்றும் சட்டவிரோத சொத்து குவிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 42 வழக்குகள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காலப்பகுதியில் 45 பேர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.