புதிய சட்ட திருத்தத்தின் மூலம் தனியார் துறையின் அடிப்படை சம்பளம் கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் 27 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதுடன் ஜனவரி முதலாம் திகதி முதல் அது 30 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும். அதேபோன்று தோட்டத் தொழிலாளர்களுக்கும் மாதச் சம்பள அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுப்போம் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற வேலையாட்களின் வரவு -செலவுத் திட்ட நிவாரணப்படி, திருத்தச் சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதன திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
வங்குரோத்து அடைந்த பொருளாதாரத்தையே நாங்கள் பெற்றுக்கொண்டபோதும் தற்போது நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதனால் அரச ஊழியர்கள், தனியார்துறையினர் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ள முடியுமாக இருக்கிறது. கஷ்டமான விடயமாக இருந்தாலும் இதனை நாங்கள் செய்திருக்கிறோம்.
தனியார் துறையின் சம்பள அதிகரிப்பை சட்ட ரீதியில் அனுமதித்துக்கொள்ளவே தற்போது இந்த சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கிறோம். அதன் பிரகாரம், இந்த சட்டமூலம் அனுமதிக்கப்பட்டது முதல் தனியார் துறையினருக்கு அதிகரித்திருக்கும் அடிப்படைச் சம்பளம் கட்டாயமாக்கப்படுகிறது. அதன் பிரகாரம் அரசாங்கம் கடந்த வரவு - செலவு திட்டத்தில் தனியார் துறையினரின் அடிப்படை சம்பளத்தை 27ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்தது. தற்போது தனியார் துறையினர் தங்களின் சேவை நிலையங்களில் இந்த 27ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடியுமாகிறது.
ஏப்ரல் மாதத்தில் இருந்தே இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். அதனால் ஏப்ரல் மாதம் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்காவிட்டால், அவர்களுக்கு மீதி சம்பளத்துடன் பெற்றுக்கொள்ளும் உரிமை இதன் மூலம் கிடைக்கிறது.
அதேபோன்று வரவு - செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும்போது தனியார் துறையினருக்கும் அது கொடுப்பனவாகவே வழங்கப்படுகிறது. அதனால் இதுவரை காலமும் வரவு - செலவு கொடுப்பனவாக வழங்கப்பட்டுவந்த 1000 ரூபா மற்றும் 2500 ரூபா ஆகிய இரண்டு கொடுப்பனவும் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படுகிறது.
மேலும், தனியார் துறைக்கு அதிகரிக்கப்பட்டிருக்கும் இந்த 27ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் 30ஆயிரமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. அதன் பிரகாரம் ஜனவரி மாதம் முதல் தனியார் துறைக்கு 30ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளமாக வழங்கப்பட வேண்டும்.
அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் நாள் ஒன்றுக்கான சம்பளம் தற்போதைக்கு 1700 ரூபா என் நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். அது மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நாங்கள் இருக்கிறோம். அதனை சம்பள நிர்ணய சபை, முதலாளிமார் சம்மேளனம் ஆகியவற்றுடன் கலந்துரையாடி அவர்களின் இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. அதேபோன்று தனியார் துறையினரைப் போன்று தோட்டத் தொழிலாளர்களுக்கும் மாதச் சம்பளம் என்ற அடிப்படையில் வழங்க திட்டமிட்டிருக்கிறோம். அதுதான் சரியான முறைமை.
மேலும், 700 ரூபாவாக இருந்த நாள் சம்பளத்தை 1080 ரூபாவாக அதிகரித்திருக்கிறோம். ஜனவரி முதலாம் திகதி அதற்கு மேலும் 120 ரூபா அதிகரிக்கப்பட்டு 1200 ரூபா வழங்க தீர்மானித்திருக்கிறோம். 25 நாட்களுக்கு இதனை கணக்கிட்டுப் பார்த்தால் அவர்களுக்கு 30 ஆயிரம் ரூபா கிடைக்கும் வகையிலே கணக்கு பார்த்திருக்கிறோம்.
எனவே, இந்த சட்ட திருத்தம் மூலம் தனியார் துறைக்கு இந்த அடிப்படை சம்பள அதிகரிப்புக்கு சட்ட ரீதியிலான அனுமதியை அரசாங்கம் வழங்கும் என்றார்.