மாவட்டங்களில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளும் மத்திய அரசுக்குள் செல்ல வேண்டும் என்று கூறுவதன் ஊடாக மாகாண சபையும் ஒரு பலவீனமான கட்டமைப்பாக எதிர்காலத்தில் மாறக்கூடிய அபாய நிலை உள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22)நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நாங்கள் வாழைச்சேனை, மட்டக்களப்பு நகர், களுவாஞ்சிக்குடிக்கு என 3 ஒசுசல மருந்தகங்களை கேட்டிருந்தோம். இந்த 3 இடங்களிலும் உள்ள வைத்தியசாலைகளும் பாரிய மக்கள் தொகைக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலைகள் ஆகும்.
இதன் அடிப்படையில்தான் 2018, 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒசுசல நிறுவனம் நேரடியாக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு விஜயம் செய்து நிரந்தர கட்டடம் இருந்தால் ஒசுசல அமைக்கலாம் எனக் கூறினார்கள். இதற்கமையை கட்டடம் அமைக்கப்பட்டபோதும் அது தற்போது மூடப்பட்ட நிலையில் உள்ளது.
எனவே, மட்டக்களப்பு நகரில் முதலாவதாக ஒசுசல அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் நிலையில், களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையிலும் அமைக்க வேண்டும்.
எமது மாவட்டத்தை பொறுத்தவரை 3, 4 வகை வைத்தியசாலைகள் உள்ளன. எனினும் இந்த வைத்தியசாலைகளுக்கு போதிய வளங்கள் கிடைக்காத காரணத்தினால் அனைத்து வைத்தியசாலைகளும் மத்திய அரசுக்குள் செல்ல வேண்டும் என்று கூறுவதன் ஊடாக மாகாண சபையும் ஒரு பலவீனமான கட்டமைப்பாக எதிர்காலத்தில் மாறக்கூடிய அபாய நிலை உள்ளது.
மத்திய அரசின் கீழ் இருக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஏ.டி.பி வங்கியின் நிதியத்தின் ஊடாக கட்லாப், எம்.ஆர்.ஐ., சி.ரி. ஸ்கேனர் ஆகியவற்றிற்கான அனுமதி கிடைத்திருந்தது. ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட கட்லாப்பை களுத்துறை மாவட்டத்துக்கு அப்போதைய சுகாதார அமைச்சரின் செல்வாக்கை பயன்படுத்தி மாற்றினார்கள். இது 2021இல் நடந்தது. தற்போது வழங்கவுள்ளதாக கூறப்படும் கட்லாப், எம்.ஆர்.ஐ., சி.ரி. ஸ்கேனர் ஆகியவற்றில் சி.ரி. ஸ்கேனர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அவசியமில்லை எனக் கூறி வெட்டப்பட்டதாக நாங்கள் அறிகின்றோம்.
நீங்கள் அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தபோது எம்.ஆர்.ஐ.யை வழங்குவதாக உறுதிமொழி அளித்திருந்தீர்கள்.
எனவே, ஏ.டி.பி வங்கியின் நிதியம் ஊடாக மட்டக்களப்புக்கென ஒதுக்கப்பட்ட கட்லாப், எம்.ஆர்.ஐ., சி.ரி. ஸ்கானர் ஆகியன மட்டக்களப்புக்கு வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் உத்தரவாதம் தரவேண்டும் என்றார்.