வாட்ஸ்அப் ஓடிபி (OTP) மோசடிகள் தொடர்பில் பொதுமகளுக்கு சிஐடி எச்சரிக்கை



வாட்ஸ்அப் பயனர்களை குறி வைத்து சைபர் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பயனர்கள் ஓடிபி (OTP) எனப்படும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்கள் உள்ளிட்ட எந்த தகவல்களையும் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என சிஐடி எனப்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவரின் மொபைல்போனுக்கு ஓடிபியை குறுந்தகவல்கள் (SMS) ஊடாக அனுப்பி வைப்பார்கள். பின்னர் தெரியாத செல்போன் எண்ணிலிருந்து, நமது வட்ஸ்அப்பில் ஒரு செய்தி வரும். அதில் வட்ஸ்அப் கணக்கிற்கான ஆறு இலக்க குறியீடு உங்களது எண்ணுக்கு தவறாக அனுப்பப்பட்டுவிட்டதாகவும், அந்த ஓடிபி குறியீட்டை பகிருமாறு மோசடிக்காரர்கள் கேட்பார்கள். எந்த சூழ்நிலையிலும் ஓடிபியை பகிர்வதை தவிர்க்க வேண்டும்.

ஓடிபியை பகிர்ந்தால், வட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அது சைபர் குற்றவாளிகள் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடும். அதன்பிறகு அவர்கள், வட்ஸ் அப்பை பயன்படுத்தி, ஆள் மாறாட்டம் செய்து, அவருடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு செய்தி அனுப்புவர். அவற்றில் அவசர உதவி, விபத்து செலவுகள், மருத்துவத் தேவைகள் போன்றவற்றிற்காக பண உதவி கோருவர்.

இதனால், தகவல் பெறும் நபர் பணத்தை அனுப்பிவிட்டு, பின்னர் தான் இது ஒரு மோசடி என்பதை உணர்கிறார். நீங்கள் ஓடிபி பெற்றால், அதை யாருடனும் பகிர வேண்டாம்.

இதுபோன்ற நிதி மோசடிகள் தொடர்ந்து இடம்பெறுவதால், பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு சிஐடி வலியுறுத்தியுள்ளது.

எந்தவொரு சூழ்நிலையிலும் எந்தவொரு ஒன்லைன் கணக்குகளின் OTP எண்கள் அல்லது சரிபார்ப்புக் குறியீடுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.