இனியபாரதியின் மற்றுமொரு சகா மட்டக்களப்பு களுவங்கேணியில் சிஜடியினரால் கைது

இனிய பாரதியின் சகாவான மட்டு களுவங்கேணியைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவரை திங்கட்கிழமை (25) மட்டு களுவங்கேணியில் வீட்டில் வைத்து சிஐடியினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஜுலை 6 ம் திகதி அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட 2005 மற்றும் 2008 க்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்களை நடத்துதல்; மிரட்டி பணம் பறித்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய கருணா அணியைச் சேர்ந்த இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் அவரது சகாவான சசீதரன் தவசீலன் ஆகியோரை குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்தனர்.

இதனையடுத்து இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இனியபாரதியுடன் சேர்ந்து இயங்கிவந்த வரும் அவரின் சகாவான களுவங்கேணியைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவரை இவரது வீட்டில் வைத்து திங்கட்கிழமை (25) பகல் கைது குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்தனர்.

இதேவேளை இனியபாரதி அவரது சாகா கைது தொடர்பாக கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு கடந்த ஜுலை 6 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில்; 2005 மற்றும் 2008 க்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்களை நடத்துதல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் குறித்து நீண்ட விசாரணையை மேற்கொண்டது.

இந்த விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில், மேற்கூறிய குற்றங்களில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை மேற்கூறிய பிரிவின் அதிகாரிகள் குழு 2025.07.06 அன்று திருக்கோவில் மற்றும் சந்திவெளி பகுதிகளில் 45 மற்றும் 44 வயதுடைய இரு சந்தேக நபர்களை கைது செய்தது.

சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முதல் சந்தேக நபரான இனியபாரதி 2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய கருணா அம்மான் பிரிவின் திருக்கோவில் பகுதியில் உள்ள ஆயுதமேந்திய முகாமின் தலைவராகப் பணியாற்றியவர்.

அவர் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் கருணா அம்மான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சியின் அம்பாறை மாவட்ட ஜனாதிபதி ஒருங்கிணைப்பு அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பதுடன் 2012 முதல் 2015 வரை அந்தப் பிரிவு பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது.

இரண்டாவது சந்தேக நபரான தவசீலன் முதல் சந்தேக நபரின் சீடராக பணியாற்றியவர், இவர்கள் இருவரும் முதன்மையாக கிழக்கு மாகாணத்தில் குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் உள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தலைமையில் குற்றங்களைச் செய்திருப்பது தெரியவந்தது.

இந்த சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட குற்றங்கள் மற்றும் அவர்களின் உதவி மற்றும் உடந்தைகள் தொடர்பான தகவல்கள் பின்வருமாறு.

2005.02.07 அன்று பொலன்னறுவை வெலிகந்த புல்லேயரடி பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேரு உள்ளிட்ட 06 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 2007.05.09 அன்று சிந்துஜன் என்ற ஜோன்சன் ஜெயகாந்தன் படுகொலை செய்யப்பட்டார்.

2007.06.28 அன்று திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் தில்லைநாயகம் உதயகுமார் படுகொலை செய்யப்பட்டார். 2007.07.27 அன்று திருக்கோவிலைச் சேர்ந்த சிவனடிகன் அழகுராசா கடத்தப்பட்டார். 2008.04.20 அன்று கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதி கிராம சேவை உத்தியோகத்தர்களான கந்தையா நாகராசா மற்றும் கனகரத்தினம் ஆனந்தி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

25.09.2008 அன்று, திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த திருமால் திருச்செல்வம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். 21.11.2008 அன்று, திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த இராசையா கோபுலன் சுட்டுக் கொல்லப்பட்டார், அவரது தாயார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

21.12.2022 அன்று அக்கரைப்பற்று நீதிமன்றத்திற்கு தீ வைத்த சம்பவத்தில் இந்த சந்தேக நபர்கள் நேரடியாக ஈடுபட்டு உள்ளார்கள் என்பதை அறிய விசாரணைகள் நடந்து வருகின்றன.

முதல் சந்தேக நபர் இனியபாரதி தொடர்பான கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைய அறிக்கைகளின்படி, கிழக்கு மாகாணத்தில் கொலைகள், கடத்தல்கள், சித்திரவதை கூட்டங்களை நடத்துதல் மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்ட ஒரு நபராகவும் அவர் பெயரிடப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்த சந்தேக நபர்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.