வினாக்களுக்கு விடையளித்த முறைமை குறித்து பிள்ளைகளிடம் வினவுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பெற்றோரிடம் வலியுறுத்தல்


ஐந்தாம் தர புலமைப்பரிசில் ஒரு பரீட்சை மாத்திரமே, பரீட்சையில் கேட்கப்பட்ட வினாக்களை மீண்டும் பிள்ளையிடம் வினவி, பிழையான வகையில் பதிலளித்திருந்தால் பிள்ளையை கண்டிப்பது முறையற்றது. இவ்வாறான வகையில் செயற்படுவதை பெற்றோர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.பிள்ளைகளை அழுத்தத்துக்குள்ளாக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என இலங்கை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி பெற்றோரிடம் வலியுறுத்தியுள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நாடளாவிய ரீதியில் 2787 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்றது.இம்முறை 307,951 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இம்முறை 901 விசேட தேவையுடைய மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்கள்.

சிறந்த முறையில் பரீட்சைக்கான பணிகள் நிறைவடைந்தன.ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும், பெற்றோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

வினாக்களுக்கு விடையளித்த முறைமை குறித்து பிள்ளைகளிடம் வினவுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பெற்றோரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் ஒரு பரீட்சை மாத்திரமே, இந்த பரீட்சையை கொண்டு பிள்ளைகளை அழுத்தத்துக்குள்ளாக்குவதை பெற்றோர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக இந்த பரீட்சைக்கு தோற்றியவர்கள் சிறுவர்கள்.இவர்கள் தமது பிள்ளை பருவத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க இடமிக்க வேண்டும்.இந்த பரீட்சையால் பிள்ளைகளுக்கு ஏற்படும் அழுத்தத்தை தவிர்க்கும் வகையில் செயற்படுவது சகலரது பொறுப்பாகும்.

பிள்ளைகள் தமது இயலுமைக்கு அமைவாகவே பரீட்சைக்கு முகங்கொடுப்பார்கள்.பரீட்சையில் கேட்கப்பட்ட வினாக்களை மீண்டும் அந்த பிள்ளையிடம் வினவி, அவர் பிழையான வகையில் பதிலளித்திருந்தால் அவரை கண்டிப்பது முறையற்றது.இவ்வாறான வகையில் செயற்படுவதை பெற்றோர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்விக்கு சரியான பதிலளிப்பதும்,பிழையான பதிலளிப்பதும் அச்சந்தர்ப்பத்தில் பிள்ளையின் மனநிலையை பொறுத்ததாக அமையும்.இந்த பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த முறையில் ஏனைய பரீட்சைகளுக்கு தோற்ற முடியும்.ஆகவே இந்த பரீட்சையை கொண்டு பிள்ளைகளை அழுத்தத்துக்குள்ளாக்க வேண்டாம் என்று பெற்றோரிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.