9 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் - மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது



ஓராண்டுக்கு முன்னர் 9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மொனராகலை புத்தல பொலிஸார் நேற்று புதன்கிழமை (3) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது:

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும், மொனராகலை புத்தல பொலிஸ் பிரிவுப் பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் விடுமுறையில் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

பொலிஸ் கான்ஸ்டபிள் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தவேளை, அந்தப் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியின் தாயார் தன்னிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அச்சிறுமியை பாடசாலையிலிருந்து தானே அழைத்துச் சென்றுள்ளார்.

அவ்வேளை, சிறுமியை பொலிஸ் கான்ஸ்டபிள் காட்டுப் பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர், அந்த சிறுமி ஒரு வருடமாக அதைப் பற்றி பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த வாரம் பாடசாலையில் மாணவர்களுக்கு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.

பொலிஸ் கான்ஸ்டபிள் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பதை அந்த நிகழ்வின்போதே புரிந்துகொண்டிருக்கிறாள். அதனையடுத்து, பொலிஸ் கான்ஸ்டபிளின் செயல் குறித்து கடிதம் ஒன்றை எழுதி, ஆசிரியரிடம் சிறுமி கொடுத்துள்ளார்.

பின்னர், இது தொடர்பாக அதிபர் மற்றும் பெற்றோர் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அதனையடுத்து, நேற்று (3) பொலிஸ் கான்ஸ்டபிள் அவரது வீட்டில் வைத்து, கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.