நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஆசிரியர் சடலமாக மீட்பு !


நுவரெலியா, வெலிமட, போம்புரு எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஊவா பரணகம, அம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை, எட்டு ஆசிரியர்கள் கொண்ட குழு சுற்றுலாவாக இப்பகுதிக்குச் சென்றிருந்தது.

இதில் ஒரு ஆசிரியர் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

அவரைக் காப்பாற்ற முயன்ற மற்றொரு ஆசிரியர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஆசிரியரைத் தேடுவதற்கு சுழியோடிகள் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர், 31 வயதுடைய, உடப்புஸ்ஸலாவ பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையாவார்.

இவர் உடப்புஸ்ஸலாவ டலோஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிகழ்வு தொடர்பாக, இந்த எட்டு ஆண் ஆசிரியர்களும் நுவரெலியா வலயக் கல்விப் பணிமனையில் சுற்றுலாவுக்கான அனுமதி பெறவில்லை என நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் D.M.P.P. திஷாநாயக்க தெரிவித்தார்.

பொலிஸ் அறிக்கை கிடைத்தவுடன், கல்விப் பணிமனை மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊவா பரணகம, அம்பகஸ்தோவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.