வடக்கில் நினைவேந்தலுக்கு முழுமையாக அனுமதியளித்து விட்டு இராணுவத்தினரை வேட்டையாடும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவின் நிலைமை இராணுவ அதிகாரிகளுக்கும், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் எதிர்காலத்தில் ஏற்படலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கண்டி அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
இராணுவத்தினரை பாதுகாப்பதற்கு நிபந்தனையற்ற வகையில் நாங்கள் முன்னிலையாகும்.இந்த அரசாங்கம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினரை பழிவாங்கும் வகையில் செயற்படுகிறது.புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருத்திப்படுத்துவதற்காக இராணுவத்தினர் வேட்டையாடப்படுகிறார்கள்.
இராணுவத்தினரை பாதுகாக்கும் எமது செயற்பாட்டுக்கு மகாநாயக்க தேரர்களின் ஒத்துழைப்பை முழுமையாக எதிர்பார்க்கிறோம். ஏனெனில் அரசாங்கத்தை நல்வழிப்படுத்தும் பொறுப்பு மகாநாயக்க தேரர்களுக்கு உண்டு.
முன்னாள் கடற்படைத்தளபதி நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.இவருக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமை இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிர்காலத்தில் ஏற்படலாம்.
இராணுவத்தினரை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கில் நினைவேந்தலுக்கு முழுமையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றார்.