சஹ்ரானின் மனைவி கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலை



சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி வரை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் இன்று(2) விசாரணைக்கு வந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கல்முனை மேல் நீதிமன்றத்தில், உயிர்த்த ஞாயிறு தினத் தொடர் தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியா, நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் செப்டம்பர் 1 மற்றும் 2, 2025 ஆகிய இரு நாட்கள் ஆஜர்படுத்தப்பட்டார்.

இவ்வழக்கு விசாரணையின் போது, நிகழ்ச்சி குறிப்புகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது குறித்து ஆராயப்பட்டது.

மனுதாரர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சி ஹேரத் மற்றும் அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் ஆஜராகினர்.

மாதினி விக்னேஸ்வரன், தமிழ் மற்றும் சிங்கள நிகழ்ச்சி குறிப்புகளில் காணப்பட்ட மாறுபாடுகளைச் சுட்டிக்காட்டி, திருத்தங்களுக்கு நீதிமன்ற அனுமதி கோரினார்.

பிரதிவாதி பாத்திமா ஹாதியா சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஷரீப் சலாவுதீன் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

நிகழ்ச்சி குறிப்புகளில் திருத்தங்களை மேற்கொள்ள நேரம் கருத்தில் கொண்டு, வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.