கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் பணத்துக்காக முச்சக்கரவண்டி ஓட்ட பந்தயத்தில் ஈடுபட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டதாக ஜா - எல பொலிஸார் தெரிவித்தனர்.
ஜா - எல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் தடுகம மற்றும் துடெல்ல ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 15 மற்றும் 16 வயதுடைய இருவரும் 20 முதல் 26 வயதுக்குட்பட்ட 9 பேரும் ஆவார்.
ஜா- எல, வத்தளை, கந்தானை, சீதுவை மற்றும் கணேமுல்ல ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 11 முச்சக்கரவண்டிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முதலில் மூன்று முச்சக்கரவண்டிகள் ஓட்ட பந்தயத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களின் பாதுகாப்புக்காக 8 முச்சக்கரவண்டிகள் பின்தொடர்ந்து சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட முச்சக்கரவண்டிகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை எனவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா-எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.