சிறுவர் உலகை அன்பால் வெல்வோம்
21ம் நூற்றாண்டுக்கான சிறந்த சமூகத்தை கட்டியெழுப்பும் பிரிவினராகவும், எதிர்கால உலகின் தலைவர்களாகவும் இந்த உலகை காப்பதற்கு தயாராகின்ற பாதுகாவலர்களாகவும் இருப்பவர்கள் சிறுவர்களே ஆவர். இளமையில் கல்வி சிலைகள் எழுத்து எனும் கூற்றுக்கு அமைய சிறுவயதிலேயே சிறுவர்கள் வாழும் சூழல் அவர்களின் எதிர்கால வாழ்க்கைகள் தாக்கம் செலுத்துகின்றது. நாளைய தலைவர்களாக வரவேண்டிய இன்றைய இளம் சிறார்கள் அவர்களை சுற்றியுள்ள பொறுப்புத்தாளர்கள் அனைவரும் தத்தமக்குரிய வகிபாகத்தை சரிவர நிறைவேற்றி ஊக்குவிப்பார்களா என் நிச்சயமாக எதிர்காலத்தில் சிறந்ததொரு சந்ததியை உருவாக்க முடியும்.
சிறுவர் தினத்தை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டுக்கான உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு "சிறுவர் தின தேசிய வாரம்" செப்டெம்பர் 25ம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 01 பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இவர் வெளியிட்ட அறிக்கை அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, உலகப் போரின் போது ஏற்பட்ட சமூக மாற்றங்கள் காரணமாக சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். இதன்போது சிறுவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் மற்றும் துன்பங்களை கருத்தில் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை, சிறுவர்களுக்கென்று உரிமைகள் இருத்தல் வேண்டும் என தீர்மானித்தது. இதனால் 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனம் (CRC) ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
இலங்கை உள்ளிட்ட அதிகமான நாடுகள் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி "உலக சிறுவர் தினம்" கொண்டாடப்படுகின்றது. இவ்வாண்டு "அன்புடன் காப்போம் - உலகை வெல்வோம்" எனும் தொனிப்பொருளின் கீழ் சிறுவர் தொடர்பாக இயங்குகின்ற அனைத்து நிறுவனங்களும் இணைந்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் நெறிப்படுத்தலில், நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புச் சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின நிகழ்ச்சித்திட்டக் கோவையை நடைமுறைப்படுத்தி உள்ளனர். இலங்கையும் 1991 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனத்தில் கையெழுத்திட்டது. தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே சிறுவர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பில் வாதிட்டு வந்தது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சிறுவர்களுக்கு என்று பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இவ்வாண்டு தேசிய சிறுவர் நிகழ்ச்சித்திட்டத்தில் 2025.10.01 அன்று, கௌரவ பிரதமர் தலைமையிலே அலரி மாளிகையில் சிறுவர்கள் 350 பேர் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் 700 பேர் வரையில் பங்கேற்கும் தேசிய விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலக சிறுவர் தினத் திட்டமானது சிறுவர் உணர்திறன் மற்றும் சிறுவர் நட்புச் சமூகத்தை உருவாக்கவும், அவர்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை நெறிப்படுத்துவதன் மூலம் எதிர்கால உலகை மாற்றியமைக்கவும் முடியும்.
இன்றைய குழந்தைகள் நாளை தலைவர்களாக மாறுகிறார்கள். இன்றைய தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள். அவர்களின் தரமும் ஆளுமையும் தேசத்தின் தலைவிதியை தீர்மானிக்கின்றன. உலகில் வாழ்கின்ற மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்களாக காணப்படுகின்றனர். சிறுவர்கள் நாளைய நாட்டின் சமூகத்தை கட்டி எழுப்புகின்ற மாபெரும் சக்திகளாக காணப்படுகின்றனர். பெரியோர்களின் சிறந்த வழிகாட்டல்களே எதிர்கால நல்ல பல தலைவர்களை உருவாக்குவதற்கு முக்கிய பங்களிக்கின்றது.
1954 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி உலகெங்கும் உள்ள 18 வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு இடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக சிறுவர் தினம் சர்வதேச ரீதியாக கொண்டாடப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளுக்கு சபையினால் பன்னாட்டு சிறுவர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டதற்கு அமைவாக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதலாம் தேதி சர்வதேச சிறுவர் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சிறுவர்களது உரிமைகள் வாழ்வதற்கும் முன்னேறுவதற்குமான உரிமை. பிறப்பின் போது பெயர் ஒன்றையும் இன அடையாளத்தையும் பெற்றுக் கொள்ளும் உரிமை, பெற்றோரை தெரிந்து கொள்வதற்கும் அவர்களது பாதுகாப்பை பெற்றுக் கொள்வதற்குமான உரிமை, பெற்றோரிடமிருந்து தம்மை தனிமைப்படுத்தபடாது இருப்பதற்கான உரிமை, தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமை, சிந்திப்பதற்கும், மனசாட்சிப்படி நடப்பதற்கும், சமயமொன்றை பின்பற்றுவதற்குமான உரிமை, சமூக உரிமை, தனியுரிமை, சுகாதார வசதிகள் பெறும் உரிமை என்பனவாகும்.
மேலும், ஒவ்வொரு சிறுவர்களும் போதிய கல்வியை பெறும் உரிமை, பொருளாதார சுண்டல்களிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை, பாலியல் வல்லுறவுகளில் இருந்து பாதுகாப்பு பெறும் உரிமை, சித்திரவதை, கொடூரமாக நடத்துதல் போன்ற தண்டனைகளில் இருந்து தவிர்த்துக்கொள்ளும் உரிமை என்பன முக்கியமானதாக அமைகின்றன. இது போன்ற பல உரிமைகள் சிறுவர்களை பாதுகாக்கவும், சுதந்திரமாக வாழ்வதற்கும் உறுதுணையாக
அமைகின்றது.
தொழிநுட்ப உலகுடன் போராட வேண்டிய நிர்ப்பந்த சூழலில் சிறுவர்கள் எதிர்நோக்கும் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. தற்காலத்து சிறுவர்கள் பல்வேறு வகையான பிரச்சனைகளுக்கு முகங்கொடுப்பவர்களாக பாதுகாப்பின்றி காணப்படுகின்றன. அந்த வகையில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளாக மோசமான வார்த்தை பிரயோகத்தை அவர்களுக்கு எதிராக பாவித்தல், சிறுவர்களை புறக்கணித்தல், சிறுவர் உழைப்பு, சித்திரவதை, போதைப் பொருள் கடத்தலுக்காக இவர்களை பாவித்தல், இளம் வயது திருமணம், சிறுவர் கடத்தி உடல் உறுப்புகளை விற்றல், கொலை, பாலியல் துஸ்பிரயோகம், யுத்தத்தினால் பாதிப்படைதல், பெண் சிறுவர்கள் விபச்சாரத்துக்கு
அமர்த்தப்படுதல் என பல வன்முறைகள் இன்று உலக அரங்கில் சிறுவர்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
சிறுவர்களை அன்பால் அரவணைத்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடும்பம், பாடசாலை, சமூகம் ஆகிய மூன்று தரப்பினதும் முக்கிய கடமையாகும். சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை குறைத்து அவர்களை பாதுகாப்பதற்கு இந்திய அரசாங்கமானது பல்வேறு சட்டங்களையும், சிறுவர் பாதுகாப்பு அமைப்புகளையும், சிறுவர் நலம்புரி சேவை மையங்களையும் உருவாக்கியுள்ளது. அத்துடன் பெற்றோர்கள் தன் குழந்தைகளுக்கு நிம்மதியானதும் சுதந்திரமானதுமான அன்பு, அரவணைப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் சூழலை அத்தியாவசியமாக ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும், குழந்தைகளுக்கு உலகின் நன்மை தீமைகளை சரிவர எடுத்துக் கூறி சரியான முறையில் வளர்ப்பதுடன், குழந்தைகளை சுயநலமில்லாத பொதுநலம் பேணும் வகையில் வழிப்படுத்துவது அவர்களின் வளமான எதிர்கால வாழ்விற்கு வழிகாட்டுவதற்கான சிறந்த பணியாகும் என்றால் அது மிகையாகாது.
கந்தசாமி அபிலாஷ்,
B.ED, M.ED, HNDE, NCE, MPhil®






.jpg)






