(செங்கலடி நிருபர் சுபஜன்)
பண மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தொலைபேசி , இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக இடம்பெறும் பண மோசடிகள் அதிகரித்து வருவதையடுத்து, (fake identity) பயன்படுத்தும் மோசடிக்காரர்களை பற்றிய எச்சரிக்கை பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ளது.
இதே வேளை இன்று மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளில் - பாடசாலை மாணவர்களினது பொற்றோர்களின் தொலைபேசி இலக்கங்கள் எடுக்கப்பட்டு பிள்ளைக்கு எமது அமைப்பினூடாக உதவி செய்ய முன்வந்துள்ளோம், உங்கள் தொலைபேசி இலக்கத்தை பாடசாலையில் இருந்து பெற்றுள்ளோம் , EZ case மூலம் 7000 ரூபா பணம் உடன் செலுத்தும்படியும் பணம் எமக்கு கிடைத்தவுடன் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கவுள்ளதாக கூறி ஏழை பெற்றாரிடமிருந்து பண கொள்ளை மோசடியில் இனம் தெரியாதோர் இன்று ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று மட்டக்களப்பில் சில பாடசாலைகள் , தனியார் வகுப்புக்கள் ஆகியவற்றிக்கு செல்லும் பிள்ளைகளது பெற்றோரை இலக்கு வைத்து இடம்பெற்றுள்ளது.
உதவி செய்யும் கழகம், அரச அதிகாரிகள், வங்கி உத்தியோகத்தர்கள்,அல்லது நிறுவனப் பணியாளர்கள் என தொலைபேசி மூலம் தங்களை அறிமுகப்படுத்தி - உங்கள் பிள்ளைகளுக்கு உதவ முன்வந்துள்ளோம் என தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பணம் கேட்கும் செயற்பாட்டில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தொலைபேசி அழைப்புகள், செய்திகள் அல்லது சமூக ஊடக கணக்குகள் மூலம் வரும் எந்தவொரு கோரிக்கைக்கும் நம்பிக்கை வைக்காமல், சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டு உறுதி செய்த பிறகே நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
சரியான ஆதாரம் இன்றி Ez case , வங்கி கணக்கு எண்கள், கடவுச்சொற்கள், OTP, அடையாள எண்கள் உள்ளிட்ட தகவல்களை வழங்காதீர்கள் என்றும், சந்தேகத்திற்கிடமான அழைப்புகள், செய்திகள் கிடைத்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிசாரிடம் அல்லது சைபர் பாதுகாப்பு பிரிவிடம் அறிவிக்கப்படும் வகையில் பொதுமக்கள் செயற்படுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இத்தகைய மோசடிகளிலிருந்து தங்களை மற்றும் தங்கள் குடும்பத்தினரை பாதுகாக்க அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.