அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ்ப்பாணத்திற்காக 36 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது ; அந்தப் பணம் தேவையில்லை - அர்ச்சுனா இராமநாதன்


இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ்ப்பாணத்திற்காக 36 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணம் யாழ்ப்பாணத்திற்கு தேவையில்லை. வரவு- செலவுத்திட்டம் முடிந்த பின்னர் வேண்டுமென்றால் வடக்கிற்கு வாருங்கள். வேண்டுமென்றால் வடக்கிற்கும் கிழக்கிற்கும் புலம்பெயர்ந்தோரிடமிருந்து பணத்தை பெற்றுத்தருகின்றேன். தேவைப்பட்டால் தெற்கிற்கும் பகிர்கின்றேன். நான் ஆம் என்று கூறினால் புலம்பெயர் உறவுகள் பணத்தை அனுப்பி வைப்பார்கள் என யாழ் மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

வடக்கு மாகாணத்திற்கு 36 கோடி ரூபா அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமத்துவம் என்ற விடயம் தெரியாமலே அரசாங்கம் செயற்படுவது மிகவும் கவலையாக இருக்கின்றது.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25000 ரூபா கொடுக்கப்படுகின்றது. முழந்தால் அளவுக்கு தண்ணீர் வந்தவனுக்கும் அதே தொகைதான் வீடு முழுமையான மூடப்பட்டவருக்கும் அதே தொகைதான். 2ஆம் திகதி இடைத்தங்கல் முகாமொன்று அமைக்கப்பட்டுள்ளது. 30ஆம் திகதி மழை நின்ற பின்னர் 2ஆம் திகதி இடைத்தங்கல் முகாம் எதற்கு,

வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட சகல பிரதேசங்களிலும் படுமோசமான நிலைமையாக காணப்படுகிறது. யாழ்ப்பாணத்திற்காக 36 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை தேசிய மக்கள் சக்தியினருக்கே வழங்கப்படுகிறது. அந்தப் பணம் யாழ்ப்பாணத்திற்கு தேவையில்லை. அதனை தோட்டப்புற மக்களுக்கு வழங்குங்கள். அரசாங்கத்தின் செயற்பாடு வெட்கக்கேடானது. எனக்கு கொடுக்கும் கெப் வாகனத்திற்கான பணத்தை மக்களுக்கு கொடுங்கள். எனக்கு அந்த வாகனம் தேவையில்லை.

வரவு- செலவுத்திட்டம் முடிந்த பின்னர் வேண்டுமென்றால் வடக்கிற்கு வாருங்கள். வேண்டுமென்றால் வடக்கிற்கும் கிழக்கிற்கும் புலம்பெயர்ந்தோரிடமிருந்து பணத்தை பெற்று தருகிறேன். தேவைப்பட்டால் தெற்கிற்கும் பகிர்கின்றேன். நான் ஆம் என்று கூறினால் புலம்பெயர் உறவுகள் பணத்தை அனுப்பி வைப்பார்கள்.

வெள்ளத்தில் சிக்கிய என்னை இராணுவ வீரர்களே காப்பாற்றினார்கள்.மற்றவர்களுக்காக தமது உயிரைத் தியாகம் செய்யும் இராணுவ வீரர்களை இந்த அரசாங்கம் சிப்பாய்கள் என அழைக்கின்றது . இது எவ்வளவு கீழ்த்தரமான வேலை அவர்களை இராணுவ வீரர்கள் என கௌரவமாக அழைக்க வேண்டும் என்றார்.