திருகோணமலை மாவட்டத்தில் வரலாறு காணாத பாரிய அழிவினை மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு ஏற்படுத்திவிடும் என அச்சம் வெளியிட்டு வந்த சூழ்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாற்று அணைக்கட்டின் மேல் பகுதி உடைப்பெடுத்து வெள்ள நீர் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து வருகின்றது.
வெள்ளப்பெருக்கின் காரணமாக வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உப்பூறல், பூநகர், பூமரத்தடிச்சேனை தவிர்ந்த அனைத்து கிராம மக்களும் இடம்பெயந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் மகாவலி கங்கையின் கிளையான வெருகல் ஆற்றை மேவியும், நாதனோடை என்ற பகுதியிலும் வெள்ள நீரானது அணைக்கட்டை மேவி பாய்ந்த நிலையில் வெள்ள நிலைமை ஏற்பட்டிருந்தது. பின்னர் மாவிலாற்று அணைக்கட்டின் உடைப்பின் ஊடாகவும் வெருகலுக்குள் பெருமளவான வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.
இதனால் பிரதேச செயலகம், ஈச்சிலம்பற்று வைத்தியசாலை ஆகியவற்றில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதுடன் பிரதான வீதியில் 03அடிக்கு மேல் வெள்ளநீர் பாய்ந்து வருகின்றது. அதேபோன்று வெருகல் ஆலயத்தை அண்மித்த பகுதியில் 08 அடிக்கு மேல் வெள்ள நீர் பாய்கின்றது. இதனால் இயங்திர படகின் மூலமே போக்குவரத்து இடம்பெறுகின்றது.
அதைவிட இராணுவ கவச வாகனங்களின் உதவியுடனும்; அதிகாரிகள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்கள். அப்பகுதியில் குடிநீருக்கு மிகவும் தட்டுப்பாடு நிலவுகின்றது சேருவில பகுதியில் இருந்தே பௌசர் மூலம் குடிநீர் விநியோகம் இடம்பெறுகிறது இருந்தாலும் அது போதுமானதாக இல்லை.
மாவிலாறு அணைக்கட்டு முழுமையாக உடைக்குமாக இருந்தால் வெருகல், சேருவில, மூதூர், கிண்ணியா பிரதேச செயலக பிரிவுகள் உள்ளிட்ட பெருமளவான பகுதிகள் பாரியளவான அழிவை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு முழுமையாக பாதிக்கப்படும் அதேபோன்று சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் சேமபுர, லிங்கபுரம், ஆதியம்மன்கேணி உட்பட பல பகுதிகளும் அதை அண்மித்த மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி போன்ற கிராமங்களும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும்.
குறித்த கிராம மக்கள் பெருமளவானவர்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவிலாறு முழுமையாக உடைப்பு எடுக்லாம் என்ற அச்சத்தில் அந்த இடைத்தங்கல் முகாம்களையும் இடம்மாற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக பட்டித்திடல் மகாவித்தியாலயத்தில் கங்குவேலி கிராம மக்களின் ஒரு பகுதியினர் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் பின்னர் தோப்பூரில் உள்ள பாடசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கங்குவேலியின் பின்புறமாக உள்ள மகாவலி அணைக்கட்டு நேற்று (29) இரவு உடைத்து இரவு ஊரூக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது. வீட்டுக்குள் கிட்டத்தட்ட 3 அடிக்கு மேல் வெள்ள நீர் பாய்கின்றது அதேபோன்று லிங்கபுரம் பகுதியிலும் ஆதியம்மன் கேணியின் பின்புறமாகவுள்ள மகாவலி அணைக்கட்டு சிறியளவில் உடைப்பெடுத்ததால் அங்கும் 3 அடிக்கு மேல் ஊருக்குள் வெள்ள நீர் பாய்ந்து வருகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மதியம் 12 மணிவரையிலான காலப்பகுதிவரை 17926 குடும்பங்களைச் சேர்ந்த 57858 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 16000 குடும்பங்களைச் சேர்ந்த 52416 பேர் இடம்பெயர்ந்து உறவினர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 1926 குடும்பங்களைச் சேர்ந்த 5442 பேர் 27 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 478 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மலைநாட்டில் உற்பத்தியாகின்ற மகாவலி கங்கையானது கிழக்கே குறிப்பாக வெருகல், மூதூர் ஆகிய பகுதிகளில் பல கிளைகளாக பிரிந்து கடலுடன் கலக்கின்றது. அந்தவகையில் வெருகலில் பகுதியில் இரு கிளைகளாக பிரிந்து கடலுடன் கலக்கின்றது. அதிக மழைவீழ்ச்சி பதிவாகின்ற காலப்பகுதிகளில் மகாவலி கங்கையை மேவி பாய்கின்ற அல்லது உடைப்பு எடுக்கின்றபோது குறிப்பாக நாதனோடை அனைக்கட்டு உடைத்து வெருகல் பகுதி வெள்ளத்தில் மூழ்குவது வழமை. இது ஒவ்வொரு வருட இறுதியிலும் வழக்கமாக இடம்பெற்று வந்தது. இந்நிலையில் நாதனோடை அணைக்கட்டு உடைப்பெடுக்காத வகையில் போடப்பட்டதைத் தொடர்ந்து வெள்ளத்தின் தாக்கம் கடந்த சில வருடங்கள் குறைவாக காணப்பட்டன.
இந்நிவையில் மகாவலி கங்கையின் கிளையினால் வெளியாகின்ற பெருமளவான நீரை மறித்து மாவிலாறு அணைக்கட்டு கட்டப்பட்டு அதன் ஊடாக விவசாயத்திற்கு தேவையான நீர் பெற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றது. இது கிட்டத்தட்ட 15 அடிக்கு மேல் உயரமுடையதாக காணப்படுகின்றது. மலைநாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையின் காரணமாகவும் ஏணைய நீர்த்தேக்கங்கள் திறந்து விட்டதன் காரணமாகவும் மகாவலி கங்கையின் நீர் மட்டம் திடீரென அதிகரித்துள்ளது.
மேலதிக நீர் கடலுடன் கலப்பதன் மூலம் பாதிப்பு இல்லாத சூழல் உருவாகும் ஆனால் கடலுடன் கலப்பதற்கு குறித்த நீர் குறிப்பிட் தூரம் பயணம் செய்ய வேண்டும். ஆனால் நீரின் அளவு மிகவும் அதிகம் என்பதால் அணைக்கட்டை மேவி பரவ வேண்டி ஏற்படுவதோடு அணைக்கட்டையும் உடைக்கும் நிலையும் உருவாகிறது.




.jpeg)



.jpeg)
.jpeg)



.jpeg)