இலங்கையின் தென்கிழக்காக காணப்பட்ட தாழ் அமுக்கப் பிரதேசம் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக விருத்தியடைந்துள்ளது. இந்த தாழ் அமுக்கம் மட்டக்களப்பில் இருந்து சுமார் 210 km தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்துவரும் 12 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து ஆழ்ந்த தாழ் அமுக்கமாக மாற்றமடையும். அதனைத் தொடர்ந்து வருகின்ற 12 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து அதாவது நாளையளவில் சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சூறாவளிக்கு எமன் நாட்டினால் பரிந்துரைக்கப்பட்ட "டித்வா" ( Ditwah ) அதாவது இயற்கையால் அமைந்த ஏரி எனும் பெயர் சூட்டப்படலாம். இதன் தாக்கத்தின் காரணமாக நிலவுகின்ற பலத்த காற்றுடன் கூடிய கனத்த மழை நாடு முழுவதிலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆகையினால் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நாடு முழுவதிலும் வானம் முகில் செறிந்து காணப்படுவதுடன் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் 200 மில்லிமீற்றரிலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு, மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் 150 மில்லிமீற்றரிலும் கூடிய மிகப் பலத்த மழை செய்வதுடன் நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மணித்தியாலத்திற்கு சுமார் 60 - 70 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து வட திசையை நோக்கி காற்று வீசும். காற்றின் வேகம் சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 - 70 km ஆக அதிகரித்தும் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் இருந்து மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
புத்தளம் தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 - 4.0 m உயரத்திற்கு மேலெளக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.


.jpeg)




.jpeg)
.jpeg)
.jpeg)

