அரசாங்க வங்கி ஒன்றில் போலி நகையை அடகு வைக்கச் சென்ற சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட குறித்த அரச வங்கி நிர்வாகம் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
போலி நகையை அடகு வைப்பதற்காக வங்கிக்கு வந்த நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட வங்கியின் ஊழியர், இது குறித்து முகாமையாளருக்கு அறிவித்துள்ளார்.
உடனடியாகச் செயற்பட்ட வங்கி முகாமையாளர், கல்முனை தலைமையகப் பொலிஸாருக்கு அறிவித்ததுடன், சந்தேக நபரையும் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இந்தப் போலி நகையை கடற்கரைப் பகுதியில் கண்டெடுத்ததாகவும், பின்னர் கல்முனை நகரப் பகுதியில் உள்ள நகைக்கடையில் அதனைப் பெற்றுக்கொண்டதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின்போது முரண்பாடான வாக்குமூலங்களை வழங்கியுள்ளார்.
சுமார் 49 வயதுடைய குறித்த சந்தேக நபர், நேற்று (20) கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்கண்ட விடயம் தொடர்பாக கல்முனைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸார் வழிகாட்டலில், கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.ஏ.எல். லசந்த களுஆராச்சி தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





.jpg)





