சிவனொளிபாதமலை யாத்திரீகர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்



சிவனொளிபாதமலை யாத்திரைக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அறிக்கையொன்றை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் கடந்த 04ஆம் திகதி, போயா தினத்தன்று ஆரம்பமானது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் நிபுணர்கள் குழு, குறித்த இடத்தைப் பார்வையிட்டு, சிவனொளிபாதமலை தளத்திற்கு செல்லும் ஹட்டன் வீதியிலுள்ள மகாகிரிதம்ப பகுதியில் தற்போதைய புவியியல் உறுதியற்ற தன்மை குறித்து ஆய்வு நடத்தியது.

அதன்படி, பாதையை மீட்டெடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில், ஹட்டன் நுழைவாயில் வழியாக சிவனொளிபாதமலைக்கு செல்வது, சம்பந்தப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் வரை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சிவனொளிபாதமலை யாத்திரை தளத்திற்கு ஹட்டன் பாதை ஆபத்தானது என்பதால், யாத்திரை தளம் வரை பயணிக்கும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக பாதையை மட்டுப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாத்திரை தளத்திற்கு செல்ல விரும்பும் பக்தர்கள், தங்கள் பகுதிகளிலிருந்து போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்யும் போது, நிலவும் மோசமான வானிலை மற்றும் வழித்தடங்கள் குறித்து மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் செயற்படுமாறு பொலிஸ் தலைமையகம் வலியுறுத்தியுள்ளது.