கொழும்பிலிருந்து 3 பகல் நேர விமான சேவைகளை இணைத்துள்ள சிங்கப்பூர் எயார்லைன்ஸ் !


சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனம் கொழும்பு மற்றும் சிங்கப்பூர் இடையே 3 பகல் நேர விமான சேவைகளை 2026 ஜனவரி 06 முதல் ஆரம்பிக்கிறது.

இந்த முயற்சியானது இலங்கைக்கும் விமான நிறுவனத்தின் உலகளாவிய வலையமைப்பிற்கும் இடையிலான தொடர்பை மேலும் விரிவுபடுத்தச் செய்கிறது.

புதிய பகல் நேர சேவையானது செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் இடம்பெறும். இது ஏற்கனவே உள்ள விமானப் பயண கால அட்டவணையை வலுப்படுத்துவதுடன், இரு நகரங்களுக்கும் இடையே பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மேலதிக நெகிழ்வுத் தன்மையையும், பயணத் தெரிவுகளையும் வழங்குகிறது.

இந்த புதிய சேவைகளின் சேர்க்கையின் மூலம், கொழும்பு மற்றும் சிங்கப்பூர் இடையிலான சிங்கப்பூர் எயார்லைன்ஸ் சேவைகள், வாரத்திற்கு பத்து (10) விமானங்களாக அதிகரிக்கும்.

இந்த விமான பயணங்கள் Airbus A350 மற்றும் Boeing 787-10 Dreamliner போன்ற சிங்கப்பூர் எயார்லைன்ஸின் அதிநவீன விமானங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும்.

இந்த புதிய சேவையில் பயணிக்கும் வாடிக்கையாளர்கள், விருது பெற்ற உயர்தர சேவையையும் மேம்பட்ட விமான பொழுதுபோக்கு அம்சங்களையும் எவ்வித இடையூறுகளுமின்றி அனுபவிக்க முடியும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பகல் நேர விமான நேர அட்டவணையானது, சிங்கப்பூர் சாங்கி (Changi) விமான நிலையத்தின் ஊடாக, சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விரிவான வழித்தடங்களில் உள்ள முக்கிய இடங்களுக்கு தடையற்ற இணைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அவுஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் முக்கிய

நகரங்களுக்கான மேம்பட்ட இணைப்பை ஏற்படுத்தும் வசதிகளும் உள்ளடங்கும். இது வணிகம் மற்றும் சுற்றுலாப் பயணங்கள் ஆகிய இரண்டிற்கும் பெரும் ஆதரவாக அமையும்.

இது குறித்து, சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான பொது முகாமையாளர் Biren Poh தெரிவிக்கையில், "கொழும்பு மற்றும் சிங்கப்பூர் இடையே பகல் நேர விமான சேவையை அறிமுகப்படுத்துவது இலங்கைச் சந்தை மீதான எமது நீண்டகால அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது. இந்தப் புதிய செயற்பாடானது, வாடிக்கையாளர்கள் பயணத் தெரிவுகளை

மேற்கொள்ள அதிக நேர வசதியை (Scheduling flexibility) வழங்குவதுடன், சிங்கப்பூரை மையமாகக் கொண்டு உலகளாவிய முக்கிய சந்தைகளுடன் இணைவதையும் இலகுவாக்குகிறது.

எமது வாடிக்கையாளர்களின் மாற்றமடைந்து வரும் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதேவேளையில், இலங்கைக்கும் உலகின் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். என்றார்.

இதற்கான விமான பயணச்சீட்டுகளை சிங்கப்பூர் எயார்லைன்ஸின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.singaporeair.com அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.