
ஆறாம் தர ஆங்கில பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது. யார் தவறிழைத்தது? அதன் நோக்கம் என்பதும் விசாரணைகளின் பின்னர் பகிரங்கப்படுத்தப்படும். இந்த பாடப்புத்தகங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவில்லை. இந்த விடயத்தை முன்னிலைப்படுத்தி புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என கல்வி அமைச்சரும் பிரதமருடான கலாநிதி ஹரிணி அமரசூரிய சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2025.11.28ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இறுதி வாரமளவில் நாட்டில் மிக மோசமான காலநிலை நிலவியது. அத்துடன் பேரிடர்களும் ஏற்பட்டன. இதனால் 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டனர். நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முழு நாட்டுக்கும் அவசரகால நிலைமை அமுல்படுத்தப்பட்டது.
அவசரகால சட்டம் ஜனாதிபதியால் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது. பேரிடரால் ஏற்பட்ட சேதங்களில் இருந்து மீள்வதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும் இச்சட்டத்தில் செயலாற்றுகை காலம் ஜனாதிபதியால் நீட்டிக்கப்பட்டது. ஆகவே அவசரகால சட்டம் எக்காரணிகளுக்காகவும் தவறாக பயன்படுத்தப்படாது. ஏற்பட்ட அனர்த்த நிலைமையில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கே இந்த சட்டம் பயன்படுத்தப்படும்.
ஆறாம் தர ஆங்கில பாடத்தின் ஒரு தொகுதியில் சேர்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் பற்றி பேசப்படுகிறது. தேசிய கல்வி நிறுவனம் பிறிதொரு சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சால் அதிகாரத்தை பிரயோகிப்ப முடியாது. நிறுவனத்தின் ஆணைக்குழு ஊடாக இந்த பிரச்சினை தொடர்பில் விரிவாக ஆராயப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் எதனையும் மறைக்க வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது. இடம்பெற்ற தவறு தொடர்பில் முறையாக விசாரிக்கப்படுகிறது. யார் தவறு இழைத்தது, அதன் நோக்கம் என்பதும் விசாரணைகளின் பின்னர் பகிரங்கப்படுத்தப்படும்.
இந்த பாடப்புத்தகங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவில்லை. ஆகவே தவறான அச்சத்தையும், நிலைப்பாட்டையும் தோற்றுவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த விடயத்தை முன்னிலைப்படுத்தி புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.



.jpg)




.jpg)



.jpeg)