கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு - விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்



தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று திங்கட்கிழமை (12) காலை சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சின் முன் இந்தப் போராட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த போராட்டத்தின் போது, கல்வி அமைச்சரின் திட்டங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டவை எனவும், அவை நாட்டின் தேசியக் கல்வி முறையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

"ஹரிணியின் தவறான கல்விச் சீர்திருத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெறு" மற்றும் "பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பகடைக்காயாக்கும் கல்வி அமைச்சரே பதவியை விட்டு விலகு" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் தரையில் அமர்ந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக, அமைச்சரை விமர்சிக்கும் வகையிலான கேலிச்சித்திரங்கள் மற்றும் "Harini Go Home" போன்ற வாசகங்கள் அடங்கிய பாரிய பதாகைகளும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்வித் துறையில் அரசாங்கம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள மாற்றங்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்த போராட்டக்காரர்கள், இந்தச் சீர்திருத்தங்கள் உடனடியாக நிறுத்தப்படும் வரை தமது போராட்டங்கள் தொடரும் எனவும் எச்சரித்துள்ளனர்.

இந்தத் திடீர் சத்தியாக்கிரகப் போராட்டம் காரணமாக கல்வி அமைச்சிற்கு முன்னாலுள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், அப்பகுதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.