முழு கல்வி மறுசீரமைப்பு திட்டத்திலும் பாரிய தவறுகள் இடம்பெற்றிருந்தால் கல்வி அமைச்சரின் பதவி விலகல் குறித்து அவதானம் செலுத்தலாம். ஏற்பட்டுள்ள சிறிய தவறுக்காக கல்வி அமைச்சரை பதவி விலகுமாறு வலியுறுத்த முடியாது. அவர் பதவி விலய வேண்டிய தேவையும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (6) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கல்வி மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு இரவில் தீர்மானிக்கப்பட்ட விடயமும் அல்ல. எமது கொள்கைப் பிரகடனத்திலும் கல்வி மறுசீரமைப்புக்களுக்கு பாரிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பரந்துபட்ட கலந்தாலோசனைகளின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஆசிரியர்களுக்கும் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. எனவே மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்தும் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. இதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் போது ஏற்படும் சில சிறிய தொழிநுட்ப ரீதியான தவறுகளுக்காக முழு திட்டத்தையும் இடைநிறுத்த முடியாது.
தவறுகள் தொடர்பில் மீளாய்வு செய்து அவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தயாராகவே இருக்கின்றோம். சில சிறிய குழுக்கள் வெளியில் கூறிக் கொண்டிருப்பதைப் போன்று தேவையற்ற நோக்கங்களுக்காக கல்வி மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்படவில்லை. ஏற்பட்ட தொழிநுட்ப தவறு விரைவில் திருத்தப்படும் எனத் தெரிவித்திருக்கின்றோம்.
எவ்வாறிருப்பினும் இந்த தொழிநுட்ப தவறு ஏற்படக் காரணமாக இருந்த பொறுப்பின்றி செயற்பட்ட அதிகாரிகள் யார் என்பது விசாரணைகளில் இனங்காணப்பட்டதன் பின்னர் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை கல்வி மறுசீரமைப்புக்களும் நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும். தேசிய கல்வி நிறுவகம் மற்றும் கல்வி அமைச்சினால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முழு கல்வி மறுசீரமைப்பு திட்டத்திலும் பாரிய தவறுகள் இடம்பெற்றிருந்தால் கல்வி அமைச்சரின் பதவி விலகல் குறித்து அவதானம் செலுத்தலாம். அதனை விடுத்து ஏற்பட்டுள்ள ஒரு சிறிய தொழிநுட்ப தவறுக்காக கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் எனக் கூறுவது பொறுத்தமானதல்ல. அரசாங்கமும் அவ்வாறு வலியுறுத்தப் போவதில்லை. கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டிய அவசியமும் இல்லை என்றார்.


%20(1).webp)

.jpg)




.jpg)



.jpeg)