அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஜனாதிபதி எதிர்ப்பாரென எதிர்பார்க்கின்றோம் - திலித் ஜயவீர !


வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்ப்பார் என்று தான் எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இதில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தால், அவருக்குத் தனது நிபந்தனையற்ற ஆதரவை 'வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள திலித் ஜயவீர, வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் நகர்வுகளுக்கு இலங்கையின் சோசலிச ஜனாதிபதி எதிர்ப்புத் தெரிவிப்பார் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு இறையாண்மை கொண்ட நாட்டிற்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டதாக அவர் குறிப்பிடும் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக ஒரு துணிச்சலான பதிலை வழங்குவதற்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

வெனிசுவேலா நிலைவரம் குறித்து மக்கள் விடுதலை முன்னணி அறிக்கையொன்றை வெளியிட்டு, வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கையை இறையாண்மை மற்றும் வெளிநாட்டுத் தலையீடு குறித்த கவலைகளைச் சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.