ஐவர் உயிரிழந்த சம்பவம் - பெண் ஒருவர் கைது !


வென்னப்புவ, வைக்கால - தம்பறவில பிரதேசத்தில் இன்று (06) காலை 5 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 வினவியபோது, அவ்விருவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

சட்டவிரோத மதுபானம் எனக் கருதப்படும் திரவமொன்றே இந்த மரணங்களுக்குக் காரணம் என தற்போது சந்தேகிக்கப்படுகிறது.

வென்னப்புவ, வைக்கால - தம்பறவில பிரதேசத்தில் உள்ள அரைக்கும் ஆலை ஒன்றின் ஊழியர்கள் ஐவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தக் குழுவினர் ஏதோ ஒரு திரவத்தை அருந்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் பல சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர்களில் இருவர் இன்று காலை அந்த ஆலையில் உள்ள அறையொன்றில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதுடன், மேலும் மூவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அந்த ஆலையின் அருகிலுள்ள வீடொன்றில் இருந்த ஒருவரும் இன்று காலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக  செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், அதே பிரதேசத்தில் அமைந்துள்ள வாகன திருத்தகம் ஒன்றில் இருந்த மேலும் மூவர் இன்று காலை ஆபத்தான நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தியதுடன், பின்னர் அவர்களில் இருவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மரணங்கள் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சட்டவிரோத மதுபானம் அருந்தியமையே இதற்குக் காரணமாக இருக்கலாம் என தற்போது சந்தேகிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.