தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தடைச் சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் அரசாங்கத்தினால் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் வரைவில் முன்னைய திருத்தச் சட்டமூலங்களை விடவும் மோசமான விடயங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும், பயங்கரவாதத்தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதை விடுத்து, அதனைப் பதிலீடு செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முற்றாக எதிர்ப்பதாகவும் சுமந்திரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதிய சட்ட வரைவின் உள்ளடக்கங்கள் குறித்துத் தாம் ஆராய்ந்து வருவதாகவும், அதற்கமைய இவ்வரைவின் உள்ளடக்கங்களில் பெரும்பாலானவை கடந்த 2023 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் உள்ளடக்கங்களையே ஒத்திருப்பதாகவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
அவ்வேளையில் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தேசியமக்கள் சக்தியின் சார்பில் இப்போது வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகிக்கும் விஜித்த ஹேரத் உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால் இப்போது அதன் உள்ளடக்கத்திலிருந்து பெருமளவுக்கு மாறுபடாத புதிய வரைவை அரசாங்கம் முன்மொழிந்திருக்கிறது என அவர் கரிசனை வெளியிட்டார்.
அதுமாத்திரமன்றி இப்புதிய வரைவைத் தயாரித்த நிபுணர் குழுவில் அங்கம் வகித்த பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள், பயங்கரவாத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு இப்புதிய வரைவு கூடப் போதுமானதல்ல என முரண்பட்டதாக அறியக்கிடைத்ததாகச் சுட்டிக்காட்டிய சுமந்திரன், எனவே எதிர்க்கட்சியாக இருந்தபோது முன்னிறுத்திய தமது கொள்கையைப் புறந்தள்ளிட்டு, இப்போது அரசாங்கம் பாதுகாப்புத்தரப்பினரின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து இவ்வரைவை வெளியிட்டிருப்பதாக விசனம் வெளியிட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் புதிய வரைவின் உள்ளடக்கம் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்ததன் பின்னர், வெகுவிரைவில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி நிதியமைச்சுக்குக் கடிதம் அனுப்பிவைப்போம் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.





.jpg)





.jpg)

