முச்சக்கரவண்டியை திருடிய மூன்று சந்தேகநபர்கள் நுகேகொடை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியை திருடியமை தொடர்பில், கடந்த டிசம்பர் 28ஆம் திகதி மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டதை தொடர்ந்து, நுகேகொடை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தனர்.
அதற்கமைய கடந்த 10ஆம் திகதி முச்சக்கரவண்டி திருட்டு சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, நேற்று (11) மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், சந்தேகநபர்களால் குருவிட்ட பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட முச்சக்கரவண்டிகள் பொலிஸாரின் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், யட்டியாந்தோட்டை, பலாங்கொடை, பதுளை மற்றும் பத்தரமுல்லை ஆகிய பகுதிகளில் சந்தேகநபர்களால் திருடப்பட்ட 10 முச்சக்கரவண்டிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் களனி, அம்பலாந்தோட்டை மற்றும் பரகடுவ பகுதிகளைச் சேர்ந்த 30, 32 மற்றும் 46 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டிகளின் நிறம், இலக்கம் மற்றும் எஞ்சின் இலக்கம் என்பவற்றை மாற்றி, அவற்றை விற்பனை செய்வதற்காக போலி இலக்க தகடுகள் மற்றும் ஆவணங்களைத் தயாரித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நுகேகொடை குற்றப் புலனாய்வுப் பிரிவு, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.





.jpg)





.jpg)

