புதிய கல்விக் கொள்கை தொடர்பில் பிரதமருக்கு எதிரான தவறான பிரச்சாரங்கள் - அமைச்சர் விஜித்த ஹேரத் கண்டனம் !


புதிய கல்விக் கொள்கை தொடர்பில் குறுகிய அரசியல் நோக்கமுடையவர்கள் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்து பிரதமர் மீது மிக மோசமான குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் முன்வைக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிரதமரை பதவி விலகுமாறு அரசாங்கத்தில் எவரும் குறிப்பிடவில்லை என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

6ஆம் தர பாடப்புத்தகத்தில் தவறான விடயமொன்று உள்ளடக்கப்பட்டுள்ளமை பாரதூரமான பிழையாகும். தரவு தொகுதி அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எந்நோக்கத்துக்காக இவ்வாறான சர்ச்சைக்குரிய விடயத்தை உள்ளடக்கினார்கள் என்பது தொடர்பில் உரிய தரப்பின் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஞாயிற்றுக்கிழமை (4) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நடைமுறையில் உள்ள கல்வித் திட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில் சிறந்ததொரு நிலைப்பாடு என்பது உண்மையே எதிர்க்கட்சியினரும் அதனை அறிவார்கள். 2026 ஆம் ஆண்டு முதல் புதிய கல்வி மறுசீரமைப்பு அமுல்படுத்தப்படும் என்பதை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டிருந்தோம்.

புதிய கல்வி கொள்கைத் திட்டம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் கலாசாரம், பாரம்பரிய கோட்பாடுகளுக்கு அமைவாகவே புதிய கல்வி கொள்கை அமுல்படுத்தப்படும். பாடத்திட்ட தயாரிப்பின் போது காணப்பட்ட குறைப்பாடுகளை ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டினார்கள்.அதற்கமைய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முதற்கட்ட மறுசீரமைப்பு இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

இது அரசாங்கத்தின் கூட்டு முயற்சி மற்றும் பொறுப்பாகும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நாங்கள் எடுக்கும் அரசாங்கத்தின் கொள்கை ரீதியான நிலைப்பாடு இதுவாகும்.சிலர் தத்தமது அரசியல் மற்றும் ஏனைய குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகப் பிரதமரை இலக்காகக் கொண்டு முன்வைக்கும் விமர்சனங்களை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம். அவ்வாறு எதுவும் இல்லை. இங்கு அரசாங்கத்தின் கூட்டுக் கொள்கையின் அடிப்படையிலான செயற்பாடே காணப்படுகிறது.

தேசிய கல்வி ஆணைக்குழுவின் கொள்கை ரீதியான கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே தேசிய கல்வி நிறுவகம் இந்தக் கல்விச் சீர்திருத்தங்களைத் தயாரித்தது. ஆகவே கல்வி அமைச்சின் மூலமாகவே இவை அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன. இதனை நடைமுறைப்படுத்துவது நம் அனைவரினதும் பொறுப்பாக மாறியுள்ளது. எனவே, இச்செயன்முறையில் ஓரிடத்தில் குறைபாடு ஒன்று நிகழ்ந்துள்ளமையை நாம் மிகத் தெளிவாகக் கண்டோம்.

தரம் 6 பாடத்திட்டத்துடன் தொடர்புடைய பாடத் தொகுதியில் (Module) பாரதூரமான தவறு ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்தத் தவறை கல்வி அமைச்சு தற்போது மிகத் தெளிவாக அவதானித்துள்ளது. அது அடையாளம் காணப்பட்டவுடன், பிரதமரின் ஆலோசனைக்கமைய கல்வி அமைச்சின் செயலாளரின் ஊடாக உடனடியாக உள்ளகத் தரவுகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காகக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த அறிக்கை தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில், அந்தத் தவறுக்குக் காரணமானவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான எதிர்காலச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே, இது எவ்வகையிலும் தரம் 6 இற்கான அந்தப் பாடத் தொகுதியில் உள்ளடக்கப்படக்கூடாத ஒரு விடயமாகும். எனவே அதனை நீக்குவதற்கு கல்வி அமைச்சு கட்டாயமாகத் தீர்மானிக்கிறது. அத்துடன், இந்தச் சீர்திருத்தங்களை மேலும் ஆக்கபூர்வமான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு கல்வி அமைச்சு விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.புதிதாக அச்சிடப்பட்ட தரம் 6 ஆங்கில மொழித் தொகுதியில் தகாத இணையத்தளம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்துஇ அதன் விநியோகம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டது.

குறித்த தொகுதியில் தகாத இணையத்தளப் பெயர் ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டையடுத்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகக் கல்வி அமைச்சு தெரிவித்தது. சர்ச்சைக்குள்ளாகியுள்ள இந்தப் பாடத் தொகுதி தேசிய கல்வி நிறுவகத்தால் தயாரிக்கப்பட்டதுடன்,ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ளது. இதனையடுத்து கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

புதிய மாற்றத்தை நோக்கிச் செல்கையில் விமர்சனங்கள் தோற்றம் பெறுவது ஒன்றும் ஆச்சரியத்துரியதல்ல,இதனை அமுல்படுத்தாவிடின் அரசாங்கத்துக்கும் விமர்சனங்கள் எழாது. விமர்சனங்களை தவிர்ப்பதற்காக எம்மால் அமைதியாக இருக்க முடியும்.அவ்வாறு இருந்தால் நவீன உலகுக்கு பொருத்தமற்ற பிள்ளைகளே தோற்றம் பெறுவார்கள்.

இந்த விவகாரத்தை கொண்டு ஒரு தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கத்துடன் பிரதமர் மீது மிக மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள்.பிரதமரை பதவி விலகுமாறு அரசாங்கத்தில் எவரும் குறிப்பிடவில்லை. அதற்கான அவசியமும் கிடையாது. ஏனெனில் புதிய கல்வி கொள்கை பிரதமரின் தனிப்பட்ட தீர்மானமல்ல, அது அரசாங்கத்தின் கொள்கையல்ல,

புதிய கல்வி கொள்கை தொடர்பில் பெற்றோருக்கும் போதியளவு தெளிவு இல்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதனால் தான் ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் போலியான விடயங்களை சமூகமயப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆகவே புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் பெற்றோருக்கு அறிவுறுத்தப்படும். நாட்டுக்கும், நாட்டின் கலாசாரத்துக்கும் எதிரான எந்த விடயமும் புதிய கல்வி கொள்கையில் உள்ளடக்கப்படமாட்டாது என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.