ஆங்கில பாடத்தொகுதி தயாரிப்பில் அரசியல் தலையீடு – தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு !


ஆங்கில பாடத்தொகுதியை தயாரிப்பதற்கு அனுராதபுர மாவட்டத்தில் இருந்து ஆசிரியர்கள் அழைக்கப்பட்டார்கள். இந்த பாடத்தொகுதியில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. சிறந்த தகுதியானவர்களை உள்ளடக்கிய வகையில் அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் அரசாங்கத்துக்கு இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. ஆங்கில மொழித் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் தர்ஷன சமரவீர தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை ஏனெனில் அவர் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) நடைபெற்ற மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் கீழான ஒழுங்குவிதிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஆறாம் தர ஆங்கில பாடப்புத்தக சர்ச்சை தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. தேசிய கல்வி நிறுவகத்தின் ஆங்கில மொழித் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி 2021 ஆம் ஆண்டில் இருந்து வெற்றிடமாகவுள்ளது.

2023 ஆம் ஆண்டு பதில் பணிப்பாளராக தர்ஷன சமரவீர என்பவர் நியமிக்கப்பட்டார். இவரது தகைமை பற்றி சர்ச்சை காணப்படுகின்ற நிலையிலும் இந்த அரசாங்கம் அவரை தொடர்ந்து பதவியில் வைத்துக் கொண்டது. ஏனெனில் அவர் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக செயற்பட்டார்.அவரது மகள் தேசிய மக்கள் சக்தி சார்பில் பன்னல பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டார்.

ஆங்கில பாடத்தொகுதியை தயாரிப்பதற்கு அனுராதபுர மாவட்டத்தில் இருந்து ஆசிரியர்கள் அழைக்கப்பட்டார்கள். இந்த பாடத்தொகுதியில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன.சிறந்த தகுதியானவர்களை உள்ளடக்கிய வகையில் அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இன்று இந்த நிலைமை அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்காது.

ஆங்கில மொழித் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் தர்ஷன சமரவீர தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை. பாலியல் கல்வி மற்றும் பாலியல் இரண்டையும் அரசாங்கம் குழப்பிக் கொண்டுள்ளது.இதுவே தற்போதைய பிரச்சினைக்கு மூல காரணம்.

நீதிபதிகளின் பதவி உயர்வு தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தினோம்.ஆனால் இதுவரையில் அதற்கு பதில் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு நீதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு தொடர்பில் பல விமர்சனங்கள் காணப்படுகிறது. நீதிபதிகளுக்கு முறையிடுவதற்கு ஒரு இடம் இல்லை இதனால் தான் பாராளுமன்றத் தெரிவுக் குழு ஒனறை நியமிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம் என்றார்.