பெற்றோருக்கு சுமையையும் பிள்ளைகளுக்கு துயரத்தையும் கொடுக்காத ஒரு கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
நாட்டின் மாணவர் தலைமுறைக்கு சர்வதேசத்தை வெல்லக்கூடிய நவீன கல்வி முறை அவசியம் என்றும், கிராமிய பிள்ளைகளை வறுமைச் சுழற்சியில் இருந்து மீட்கக்கூடிய ஒரே வழி கல்வி மட்டுமே என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பொய்ப் பிரச்சாரங்களுக்கு அடிபணியாமல், நாட்டுக்குத் தேவையான கல்வி மறுசீரமைப்பு செயல்முறையைத் தொடர்ந்து முன்னெடுத்து, மாணவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அநுராதபுரம் மாவட்டத்தின் ராஜாங்கனை, தலாவ, நொச்சியாகம, மகாவிலச்சிய, பதவிய, கெபிதிகொல்லாவ, மிஹிந்தலை, ரம்பேவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அனர்த்தங்களினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (09) ராஜாங்கனை வெவே விகாரைக்கு அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
அனர்த்தத்தின் பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட 'Rebuilding Sri Lanka' திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பிரதான திட்டங்களில் ஒன்றாக இந்த 'PROJECT 5M' வீடமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த, அதே இடத்தில் மீண்டும் வீடுகளை நிர்மாணிக்க அனுமதி பெற்ற குடும்பங்களுக்கு முதற்கட்டமாக இழப்பீடு வழங்கப்பட்டது.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மக்கள் ஆணை வழங்கிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அதேவேளை, அனர்த்தத்திற்குப் பிறகு இருந்த நிலையை விடவும் ஒரு சிறந்த நாட்டையும், மக்கள் வாழ்வையும் கட்டியெழுப்பும் திட்டத்தை அரசாங்கம் தற்போது வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை அடையாளப்படுத்தும் வகையில் வீடொன்றிற்கு அடிக்கல் நாட்டிய ஜனாதிபதி, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கும் நிகழ்விலும் இணைந்து கொண்டார்.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச,பிரதேச மக்கள் பிரதிநிதிகள், அநுராதபுர மாவட்டச் செயலாளர் ரஞ்சித் விமலசூரிய, பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.







.jpg)





.jpeg)