
பாராளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள், மதுபானம் மற்றும் சிகரெட் பாவிக்கும் ஊழியர்கள் குழுவிற்கு எதிராக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன கடும் நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என பாராளுமன்றச் செயலாளர் நாயகம் காரியாலயம் தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பாராளுமன்ற செயலாளர் நாயகம் காரியாலயம், குறித்த போலிச் செய்தி எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி வெளியிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளதாக வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், அத்தகைய ஊழியர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பாராளுமன்றத்தின் எந்தவொரு அதிகாரிக்கும் சபாநாயகர் எவ்வித அறிவுறுத்தலையும் வழங்கவில்லை எனவும் செயலாளர் நாயகம் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், உணவகப் பிரிவு உள்ளிட்ட சில ஊழியர்கள் இரகசியமாக மதுபானம், போதைப்பொருள் மற்றும் சிகரெட் பாவிப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து சபாநாயகர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகப் பரப்பப்படும் செய்தியும் பொய்யானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமைகள் உருவாவதற்கு இடமளித்தமை தொடர்பில் பாராளுமன்றப் பிரதானிகளுக்கு சபாநாயகர் கண்டனம் தெரிவித்துள்ளதாக வெளியாகும் அறிக்கைகளிலும் எவ்வித உண்மையும் அடிப்படையும் இல்லையென செயலாளர் நாயகம் காரியாலயம் மேலும் வலியுறுத்தியுள்ளது.




.jpg)





.jpg)

