மட்டக்களப்பு,போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள மாணவர்களின் மேம்பாட்டிற்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஒன்றின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த காலத்தில் நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் கூட எமது பிரதேசங்களுக்குத் தேவையான தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதாக இருந்தது. அந்த அடிப்படையில் பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சி அமோக வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் கிராம ரீதியான பிரதேச வாதத்தைத் தூண்டி விட்டதால் சற்று பின்னடைவு ஏற்பட்டது ஆனாலும் நாம் எமக்குள் இருக்கும் முரண்பாடுகளைக் களைந்து ஒரு அணியாக நிற்க வேண்டும்.
நாங்கள் மக்களுக்கு உதவிகள் செய்வது வெறுமனே அரசியலுக்காக அல்ல. பாரளுமன்றம் தெரிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து இந்த நாட்டில் பிரதான எதிர்க்கட்சியின் வேலையை நான் தான் செய்துகொண்டு வருகின்றேன்.
அந்த வகையிலே அரசாங்கம் பிழைகளை விடும் போது அதனைச் சுட்டிக் காட்டும் பொறுப்பு எங்களுக்கு உண்டு. சிலர் சொல்லுகின்றார்கள் இவர்கள் இப்போது தானே வந்துள்ளார்கள். அவர்களுக்குக் காலம் கொடுத்துப் பார்க்கலாமே என்று. சுமார் ஒரு வருடங்கள் மூன்று மாதங்கள் ஜனாதிபதிக்குக் கொடுத்தாச்சு, பாராளுமன்றத்திற்கு ஒரு வருடமும் இரண்டு மாதங்களும் கொடுத்தாச்சு. சரி இன்னமும் காலம் கொடுப்போம். நாங்கள் பிழைகளைச் சுட்டிக் காட்டுகின்றோம் அவ்வளவுதான்.
இவை அனைத்தையும் தாண்டி சமத்துவம் என்ற பெயரிலே எமது தமிழ் மக்களின் அடையாளங்களை இல்லாமல் செய்வதற்காக நாம் எல்லாம் ஒரு மக்கள் என்று பேசுகின்றர்கள். திருகோணமலையிலே புத்தர் சிலை வைக்கும் போது ஒரு சட்டம் மட்டக்களப்பில் பலவந்தமாக தொல்பொருள் திணைக்களம் பதாதை வைக்கப் போகும் போது ஒரு சட்டம். எல்லா இனங்களையும் சமமாகப் பார்க்கும் கட்சி என்ன செய்ய வேண்டும். சட்டவிரோதத்தில் ஈடுபடும் தேரர்களைப் பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். ஒவ்வொரு தமிழரையும் வெட்டிக் கொல்லுவேன் என்று சொல்லிய அம்பிட்டிய தேரரை மட்டக்களப்பு பொலிஸார் மூன்று வாரங்களாகத் தேடிக் கொண்டிருந்தார்கள். பின்னர் அவரே சரணடைந்து அவருக்கு பிணையும் வழங்கப்படுகின்றது.
தவிசாளர்களின் அதிகாரம் என்ன என்பது தமிழரசுக் கட்சி தவிசாளர் பதவிகளைப் பெற்ற பின்னர் தான் அனைவருக்கும் புரிந்தது. தன்னுடைய அதிகாரம் இருக்கும் பிரதேசத்திற்குள் தவிசாளரின் அனுமதி இல்லாமல் குறித்த பிரதேசத்தில் ஒரு குண்டூசியைக் கூட நட முடியாது. சட்டவிரோதமாக ஒரு பிக்கு வந்து புத்தர் சிலையை வைத்து காணி பிடிக்கும் போது அது சட்டத்தை மீறிய விடயம்.
ஆனால் எமது மதவழிபாட்டிடங்களை தொல்பொருள் என்ற பெயரில் எடுத்து அதற்குள் எமது மக்களை சுதந்திரமாக வழிபடச் செல்வதற்கோ, அங்கு ஒரு அபிவிருத்தி விடயங்களை முன்னெடுப்பதற்கோ தடை விதித்து கைது செய்வதும் வழக்குப் போடுவதும் தான் இந்த அரசாங்கத்தின் சமத்துவமான செயற்பாடு.
விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் கூட விடுதலைப் புலிகளால் வடக்கு கிழக்குப் பகுதியில் இருந்த பௌத்த மதத் தலங்களுக்கோ மத சின்னங்களுக்கோ எவ்வித சேதமும் எற்படுத்தவில்லை என நயினாதீவு தேரர் தெரிவித்தார்.
அப்படியிருக்க திருகோணமலையில் நடந்த சம்பவத்திற்கு புத்தர் சிலையை பாதுகாப்பதற்கான நடவடிக்கை என்று சொல்லப்பட்ட விடயத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இங்கு சட்டரீதியான விடயத்தைச் செய்து பின்னர் தேரர்களுக்குப் பயந்து சட்டத்திற்கு மாறான விடயத்தை பொலிஸார் செய்தார்கள் என்பதே உண்மை.
ஜனாதிபதிக்கும் எமக்கும் நல்ல உறவு உள்ளது. அவருக்கு புகழாரம் பாடி உறவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலை எமக்கில்லை. எமக்கு எமது மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்.
நாங்களும் வாய்மூடி இருந்து விட்டால் எமது பிரதேசங்களையும் நாங்கள் கைவிட்டு அனைவரும் வாருங்கள் சமத்துவம் என்று சொல்லி இறுதியில் அவர்கள் இருப்பார்கள் நாங்கள் இருக்க மாட்டோம். இதுதான் உண்மை. தற்போது ஒரு வருடம் கடந்து விட்டது. எமது பிரச்சனைகள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு நாங்கள் செல்ல வேண்டும்.
மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு வழங்குப் போடுவதென்பது ஒரு உளவியல் ரீதியான அச்சுறுத்தல். இதனைப் பார்த்துக் கொண்டு நாங்கள் இருக்க முடியாது. நாங்கள் ஒரு அணியாகச் சென்று இதனை எதிர்க்க வேண்டும். தொல்பொருள் விடயமாக சுமார் 2,700 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அறிகின்றோம். எமது மாவட்டத்தை நாங்கள் விட்டுக் கொடுக்கப்போகின்றோமா.
ஒரு பாராளுமன்ற உறுப்பினராக மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் மூன்று அலுவலகங்களை வைத்து செயற்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக நான் அறிந்த வகையில் நான் மாத்திரமே செயற்படுத்தி வருகின்றேன். ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆறு நியமனங்கள் தருவார்கள் நான் சவால் விடுகின்றேன் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முடிந்தால் அவர்களின் நியமனங்களின் பட்டியலை வெளிப்படுத்தட்டும்.
தற்போது புதிய வருடம் ஆரம்பித்துள்ளது. இந்த வருடத்திலும் நான் அரசாங்கத்தை விமர்சிப்பேன். அரசாங்கத்தின் நல்ல விடயங்களை வரவேற்கின்றோம். ஊழல் மோசடிகளைத் தடுப்பதாகவும், விலைவாசிகளைக் குறைப்பதாகவும் சொன்னர்கள். இன்று ஒரு வருடம் நான்கு மாதம் கடந்தும் மின்சாரக் கட்டணம் 30 வீதத்தால் குறைந்ததாகத் தெரியவில்லை.
இங்கு இரண்டு விடயங்கள் உள்ளன. கடந்த அரசாங்க உறுப்பினர்கள் களவெடுத்தார்கள் அதனால் தான் விலைவாசிகள் அதிகம் என்று சொன்னால் தற்போதுள்ள விலைவாசி அதிகரித்துள்ளமைக்கான காரணம் என்ன? இந்த அரசாங்கத்தின் உறுப்பினர்களும் களவெடுக்கின்றார்களா? இல்லை அவ்வாறு இந்த அரசாங்க உறுப்பினர்கள் களவெடுக்கவில்லை என்று சொன்னால் கடந்த காலங்களில் நீங்கள் சொன்னது பொய்யாக இருக்க வேண்டும். இல்லையாயின் தற்போது மிகுதியான பணம் எங்கே? ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு அந்த அரசாங்கம் செயற்படுவதற்குப் பாராட்டுவதுடன் சேர்த்து இந்த கேள்விகளையும் நான் கேட்கின்றேன். இது பிழையா?
அது பிழையாக இருந்தால் எமது மக்கள் கண்மூடித் தனமான மனநிலையில் இருக்கின்றீர்கள் என்றே அர்த்தம். இவர்களை நாம் திருத்த முடியாது. ஆனால் எமது பயணம் தமிழ் மக்களுக்கானதாக இருக்கும்.
நாட்டில் தேசிய மக்கள் சக்திக்குப் பின்னர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வசமே அதிக உள்ளுராட்சி மன்ற அதிகாரங்கள் இருக்கின்றன. நாங்கள் எட்டு மாவட்டங்களில் மாத்திரமே போட்டியிடுகின்றோம். எங்களுக்குப் பாரிய பொறுப்பு இருக்கின்றது.
அடுத்த அடுத்த நாட்களிலே பயங்கரவாதத் தடைச் சட்டம் சம்மந்தமாகவும் வரும். அதிலும் ஒரு ஆபத்தான நிலை வரப்போகின்றது. அதற்கு நாங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது. நாங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்துப் போராட்டம் நடத்தும் போது எங்களுக்கு ஆதரவாக வந்தது இதே ஜே.வி.பி தான். அவ்வாறு போராட்டம் செய்தவர்கள் தான் இன்று அதை விட மோசமான சட்டத்தைக் கொண்டு வருகின்றார்கள்.
முகநூல்களில் எழுதும், வீதிகளில் என்னை விமர்சிப்பவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் என் மக்களுக்கு நான் விளக்கம் அளிக்க வேண்டிய தேவை உள்ளது என்று தெரிவித்தார்.




.jpg)



.jpg)

.jpeg)


