தந்தை நீதிமன்றத்தில் சாட்சி அளித்ததை வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு ரூ.10,000 அபராதம் !




கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதராகம இன்று (24 பெப்ரவரி) நீதிமன்றத்தில் தந்தை சாட்சியம் அளித்துக் கொண்டிருந்தபோது அதை காணொளியாக பதிவு செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட இளம்பெண்ணுக்கு ரூ. 10,000 அபராதம் விதித்தார்.

கொழும்பைச் சேர்ந்த அந்த இளம்பெண், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தனது தந்தை சாட்சி அளித்ததை கைப்பேசியில் பதிவு செய்ததாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

நீதிமன்ற கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் சம்பவத்தை கவனித்து, சந்தேகநபரின் கைப்பேசியை பறிமுதல் செய்து, அவரை கெசல்வத்த பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்டது.

அனுமதியின்றி காணொளி பதிவு செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என நீதவான் எச்சரித்ததுடன், கைப்பேசியில் இருந்த காணொளியை அழிக்க உத்தரவிட்டார்.