மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 22 வயதுடைய இளம் பெண் ஒருவர், நிலைமை கவலைக்கிடமானதை அடுத்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.
மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் தனது மகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படாததுடன், வைத்தியரின் கவனக்குறைவே அவரது மரணத்திற்கு காரணம் எனப் பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர்.
மினுவாங்கொடை, ஜாபாலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த செனுரி தக்ஷிலா என்ற 22 வயதுடைய திருமணமான பெண், சுகயீனம் காரணமாக கடந்த 18ஆம் திகதி மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நான்கு நாட்கள் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 22ஆம் திகதி அதிகாலை 1.00 மணியளவில் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 20 நிமிடங்களில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்ததாகப் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த செனுரியின் பெற்றோரும் கணவரும் அவரது மரணத்திற்கு மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் கவனக்குறைவே பிரதான காரணம் எனத் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, உயிரிழந்த செனுரியின் மரண விசாரணையில் அவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமையே மரணத்திற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், தமது மகள் நான்கு நாட்கள் மினுவாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதிலும், அங்கிருந்த வைத்தியர்களால் அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதை கண்டறிய முடியவில்லை எனச் செனுரியின் பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர்.
செனுரியின் பூதவுடல் மீதான இறுதிக்கிரியைகள் நாளை (25) மினுவாங்கொடை ஜாபாலவத்தை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.













