தரம் 5 வினாத்தாள் கசிவு: நீதிமன்ற உத்தரவை மீறியமைக்கு எதிராக குற்றப்பத்திரிகை



2024 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்காக தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்கவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் மூன்று வினாக்கள் கசிந்தமை தொடர்பில் பெற்றோர்கள் குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் (FR) மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், 2024 டிசம்பர் 31 ஆம் திகதி தீர்ப்பளித்தது.

அதன்படி, மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறியமைக்காக பிரேமதிலக்க தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ. 3 மில்லியனை அரசாங்கத்திற்கு நட்டஈடாகச் செலுத்த வேண்டும் எனவும், அதனை நான்கு வாரங்களுக்குள் முழுமையாகச் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், குறித்த நட்டஈட்டுத் தொகையை அவர் இதுவரை செலுத்தத் தவறியுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அஞ்சன இரத்னசிறி இன்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

இதனை ஆராய்ந்த பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெனாண்டோ ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம், பிரேமதிலக்கவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்குப் பணிப்புரை விடுத்துள்ளது.

அத்துடன் அது தொடர்பில் எதிர்வரும் மார்ச் 26 ஆம் திகதி உயர் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.