விடுதி ஒன்றில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணியிடமிருந்து 620,000 ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் 19 வயதுடைய யுவதி கைது


உனவடுன பில்லகொட பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய சுற்றுலாப் பயணியிடமிருந்து 620,000 ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் 19 வயதுடைய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் அந்த விடுதி உரிமையாளரின் மகள் என உனவடுன சுற்றுலாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விடுதியில் தங்கியிருந்த போது தனது வசமிருந்த 620,000 ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக வெளிநாட்டுப் பிரஜை வழங்கிய புகாரின் பேரில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சில மணிநேரங்களிலேயே சந்தேக நபரைக் கைது செய்தனர்.

சுற்றுலாப் பயணியினால் அறைக்குள் வைக்கப்பட்டிருந்த மறைமுக கமராவில், சந்தேக நபர் அனுமதியின்றி அறைக்குள் நுழையும் காட்சிகள் பதிவாகியுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர். இந்த காணொளி ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதே விடுதியில் இதற்கு முன்னரும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் எனத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர் இன்று (24 பெப்) காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். உனவடுன சுற்றுலாப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.