இலங்கை அமரபுர மகா நிகாயவின் உபசம்பதா வினயகர்ம நிகழ்வு ஒன்பது வருடங்களின் பின்னர் இம்முறை இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க வண. கரகொட உயங்கொட மைத்திரிமூர்த்தி மகா நாயக்க தேரரின் வழிகாட்டலின் கீழ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், புத்த சாசனத்தின் நிலைத்தலுக்கு உபசம்பதா தேரர்களின் தேவையை ஏற்றுக்கொண்டு இந்நிகழ்வுக்கு அரச அனுசரணை வழங்குவது குறித்து அரசாங்கத்தை பாராட்டுவதாக இலங்கை அமரபுர மகா நிக்காயவின் பிரதம பதிவாளர் ராஜகீய பண்டித்த, வண. பலபிட்டியே சிறிசீவலி தேரர் தெரிவித்தார்.
இலங்கை அமரபுர மகா நிகாயவின் உபசம்பதா விநயகர்ம வைபவத்தை நடத்தல் தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல், இலங்கை அமரபுர மகா சங்க சபையின் பிரதம பதிவாளர் ராஜகீய பண்டித்த வண. பலபிடியே சிறிசீவலி தேரரின் அனுசாசணையின் கீழ், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றபோதே தேரர் இவ்வாறு தெரிவித்தார்.இலங்கை அமரபுர மகா நிகாயவின் உபசம்பதா வினயகர்ம நிகழ்வு 2026 ஜூலை 09 முதல் 25 வரை 400க்கும் மேற்பட்ட பிக்கு மாணவர்களின் பங்கேற்புடன் களுத்துறை விகாரைக்கு அருகில் நடைபெறவுள்ளது.
இதனுடன் இணைந்த வகையில், உபசம்பதா வினயகர்ம அரச வைபவம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் 9ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு களுத்துறை விகாரைக்கு முன்பாக நடைபெறும்.
இந்த உபசம்பதா வினயகர்ம நிகழ்வு, 9 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனவரி மாதம் 1ஆம் திகதி இலங்கை அமரபுர மகா நிக்காயவின் வண. கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி மகா நாயக்க தேரரை சந்தித்து, புது வருடத்திற்காக ஆசிர்வாதங்களைப் பெறுவதற்காக சென்றவேளை மகாநாயக்க தேரர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அமரபுர மகா நிக்காயவின் உபசம்பதா நிகழ்வை அரச அனுசரணையுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனாதிபதி செயலகத்தின் தலைமையில், அரச நிறுவனங்கள், முப்படைகள், பொலிஸார் மற்றும் பல தனியார் நிறுவனங்களின் ஆதரவுடன் அமரபுர மகா நிகாயவின் உபசம்பதா வினயகர்ம நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இலங்கை அமரபுர மகா நிக்காயவின் உபசம்பதா வினயகர்ம நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தமது அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் என்று ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க இதன்போது தெரிவித்தார்.
இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க வண. கரகொட உயங்கொட மைத்திரிமூர்த்தி மகாநாயக்க தேரரின் வழிகாட்டலில் 9 வருடங்களின் பின்னர் நடைபெறும் அமரபுர மகா நிகாயவின் உபசம்பதா வினயகர்ம நிகழ்விற்கு வழங்கும் பங்களிப்பு குறித்து, இலங்கை அமரபுர மகா சங்க சபையின் பொதுச் செயலாளர் ராஜகீய பண்டித்த, வண. பலபிட்டியே சிறிசீவலி தேரர் தலைமையிலான அமரபுர மகா சங்க சபை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட அரசாங்கத்திற்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இலங்கை அமரபுர மகா நிகாயவின் தேரர்கள் உட்பட மகாசங்கத்தினர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, அமரபுர மகா சங்க சபையின் தலைவர் அஜித் டி சொய்சா, பொருளாளர் தம்மிக்க சமரவிக்ரம, ஆகியோருடன் அரச அதிகாரிகள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4




.jpeg)







