வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் கைது !


சட்டவிரோதமான முறையில் வின்ச் (Winch) இயந்திரங்களைப் பயன்படுத்தி கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர் ஒருவர், குறித்த இயந்திரங்கள் பொருத்தப்பட்ட இரண்டு உழவு இயந்திரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மக்கொன குடாவ மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் இவ்வாறு வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி வலைகளை இழுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, களுத்துறை மீன்பிடிப் பரிசோதகர் அலுவலக அதிகாரிகள் குறித்த இடத்திற்குச் சென்று சந்தேகநபரைத் தமது பொறுப்பில் எடுத்து, பாயாகல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நேற்று (23) மாலை இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், மீன்பிடிப் பரிசோதகர்கள் அந்த இடத்திற்குச் சென்ற வேளையிலும், சந்தேகநபர் இரண்டு வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி வலைகளை இழுக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பாயாகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் மக்கொன பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர் ஆவார். அவர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உழவு இயந்திரத்தில் பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி, மீனவர்கள் குழுவொன்று கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தது.

அந்தப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி மாலை போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைத்த ஜனாதிபதி, அவர்களுடன் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இதன்போது, அனைத்துத் தரப்பினரும் இணைந்து குறுகிய காலத்திற்குள் கலந்துரையாடல்கள் மூலம் மிகவும் பொருத்தமான தீர்வுத் திட்டங்களை முன்மொழிய இணக்கம் காணப்பட்டதுடன், போராட்டத்தை கைவிடவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.