மேலும், மலையக ரயில் மார்க்கத்தில் டித்வாவுக்கு முந்தைய வழக்கமான ரயில் சேவைகளை முழுமையாக மீட்டெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளன. இருப்பினும், மலையக ரயில் பாதையில் சுமார் 54 இடங்கள் மண்சரிவுகளால் கடுமையாக சேதமடைந்துள்ளதே இந்த பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கான பிரதான காரணமாகும்.
குறிப்பாக, அட்டன் மற்றும் நானுஓயா ரயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதிகளில், புகையிரத பாதைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, சில இடங்களில் அந்தரத்தில் தொங்குவது போன்ற நிலைமை காணப்படுகிறது. இப்பகுதிகளில் அவசர மறுசீரமைப்பு மற்றும் மீள்கட்டமைப்பு பணிகளை எதிர்வரும் நாட்களில் துரிதமாக ஆரம்பித்து முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், கிரேட் வெஸ்டர்ன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு உள்ளிட்ட பல இடங்களில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுகள் மற்றும் வீதி தாழ்வடைந்த நிலைகள் காரணமாக, பாலங்கள், புகையிரத நிலையங்கள், சமிஞ்சை கட்டமைப்புகள் மற்றும் பிரதான கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
நாட்டில் கடந்த ஆண்டு நிலவிய தித்வா புயலால் பெரிதும் சேதமடைந்த மலையக ரயில் பாதையின் பதுளை – அம்பேவெல பகுதி சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்கான ரயில் சேவைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது, மலையக ரயில் மார்க்கத்தில் பதுளை – அம்பேவெல நிலையங்களுக்கு இடையில் பல ரயில்களை சேவையில் ஈடுபடுத்த புகையிரதத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வரலாற்றில் ஒருபோதும் இடம்பெறாத அளவிலான இந்தப் பேரழிவுக்குப் பின்னர், மலையக புகையிரத சேவைகளை மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்காக, ரயில் பாதைகளை அவசரமாக மீட்டெடுக்கும் நோக்கில் புகையிரதத் திணைக்களம் துரிதமான புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.





.jpeg)





.jpeg)

