சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் ; ஹரிணி அமரசூரிய


ஊழல்மிக்க அரசியல் கலாசாரத்தால் தான் மக்கள் ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பையும் வெறுக்கிறார்கள். சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும். மக்களுக்கு வழங்கிய ஆணைக்கு அமைவாகவே பாராளுமன்ற ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்வற்காகவோ அல்லது பிரபல்யமடைவதற்காகவோ பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலத்தை கொண்டு வரவில்லை.

இந்த சட்டம் 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் இதுவரையான காலப்பகுதியில் இந்த சட்டம் ஐந்து திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற ஓய்வூதிய சட்டம் அரசியல்வாதிகளுக்கு ஏற்றாட்போல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இதனால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை. 1985 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தில் விரும்பிய ஓய்வூதியத்தை தெரிவு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற்பட்ட காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டாவது திருமணம் முடித்தால் அவரது மனைவிக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் முழு அரசியல் கட்டமைப்பையும் இவ்வாறான செயற்பாடுகளினால் தான் மக்கள் எதிர்க்கிறார்கள்.இதனை மாற்றியமைக்க கூடாதா, சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்கினால் தான் சிறந்தவர்கள் அரசியலுக்கு வருவார்கள். நாடும் முன்னேற்றமடையும்.

ஊழல்மிக்க அரசியல் கலாசாரத்தினால் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. இது இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதொரு விடயமல்ல, ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.