சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வாடகைக்கு வழங்குவோர் அவதானம் ; பொலிஸ் எச்சரிக்கை !


இலங்கை ஒரு முக்கிய சுற்றுலா இலக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸ் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் பல சந்தர்ப்பங்களில் நாட்டின் உள்நாட்டு பயணங்களுக்கு இங்குள்ள வாடகை வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். எனினும், சில வாடகை வாகன வழங்குநர்கள் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாத வெளிநாட்டவர்களுக்கு கார்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு வழங்கி வருகின்றனர்.

இதனால், பல்வேறு வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளன. எனவே இந்த விடயத்தில் இலங்கை பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர்.

2025ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் வாகனங்கள் செலுத்தும் போது இடம்பெற்ற விபத்துகள் காரணமாக 05 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 07 நபர்கள் படுகாயமடைந்துள்ளனர். விபத்துகளில் 78 நபர்களுக்கு சிறிய காயங்களுடன் கூடிய விபத்துகள் மற்றும் 06 வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன.

ஓட்டுநர்களும் வாகன உரிமையாளர்களும் மோட்டார் வாகனச் சட்டத்தை மீறி செயல்பட்டதுதான் விபத்துகளுக்கான காரணமாகக் காணப்படுகிறது. எனவே, சுற்றுலா துறையில் ஈடுபட்டுள்ள வணிகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டால், அவர்களுக்கு எதிராக இலங்கை பொலிசாரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வாகனங்களை இயக்குவதற்கு முன்னர் ஓட்டுநர்கள், தங்களது சாரதி அனுமதிப் பத்திரம், காப்புறுதி சான்றிதழ், புகை வெளியீட்டு சான்றிதழ் மற்றும் தகுதி சான்றிதழ் ஆகியவை செல்லுபடியாக உள்ளனவா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

மேலும், வாகனத்தின் இயந்திர நிலைமையையும் பரிசோதிக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டத்தின் படி, வாகனங்களை செலுத்தும் ஒவ்வொரு தருணத்திலும் ஓட்டுநர்களிடம் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்கள் இருத்தல் வேண்டும். பொலிஸ் அதிகாரி கோரும்போது, சாரதி அனுமதிப் பத்திரத்தை கட்டாயமாகக் காண்பித்தல் வேண்டும்.

மோட்டார் வாகனச் சட்டத்தின் 123 (i) (அ) பிரிவின்படி, சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் எந்தவொரு வாகனத்தையும் இயக்க முடியாது. சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனத்தை செலுத்துவது அபராதத்திற்குட்பட்ட குற்றமாகும். மேலும், அனுமதிப் பத்திரமின்றி வாகனங்கள் செலுத்தும்போது உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படுத்தினால், அபராதத்திற்கு மேலாக குற்றவியல் சட்டத்தின் கீழும் வழக்கு தொடரப்படலாம்.

செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாத நபரை ஓட்டுநராக நியமித்தாலோ, குறைந்த வயதுடையவரை வாகனம் ஓட்ட அனுமதித்தாலோ, ஓட்டுநருக்கும் வாகன உரிமையாளருக்கும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும்.

வெளிநாட்டவர்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்களை கருத்தில் கொண்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரமின்றி வெளிநாட்டவர்களுக்கு வாகனங்களை வழங்குவது தொடர்பாக போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கைகள் தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டவருக்கு கார், மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டிகள் வழங்கும் போது, பின்வரும் ஆவணங்களில் குறைந்தது ஒன்றாவது அவர்களிடம் கட்டாயம் இருத்தல் வேண்டும்.

• சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரம் (அதற்குரிய வகை வாகனங்களை இயக்க அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்)

• இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவருக்கு, இலங்கை மோட்டார் வாகனத் திணைக்களத்தினால் வழங்கிய செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம்.

• தமது சொந்த நாட்டில் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப் பத்தரத்தை இலங்கையின் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் சமர்ப்பித்து பெறப்பட்ட மொழிபெயர்ப்பு சான்றிதழ் (இந்த மொழிபெயர்ப்பு சான்றிதழ் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திலும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள சிறப்பு கவுண்டரிலும் வழங்கப்படுகிறது)

இந்த மூன்று வகைகளில் ஏதேனும் ஒரு செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரம் இல்லாத வெளிநாட்டவர்களுக்கு கார், மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டியை வாடகை, குத்தகை அல்லது வேறு எந்த அடிப்படையிலும் வழங்குவது குற்றமாகும். அத்தகைய சூழலில், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரு தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சில சந்தர்ப்பங்களில், வெளிநாட்டவர்களை தவறாக வழிநடத்தி போலியாக தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்களை சமர்ப்பிக்கும் நிகழ்வுகளும் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, வாடகை வாகன வழங்குநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.