கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி தமரா அபயரத்னவினால் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து ஆரம்பிக்கப்பட்ட 8 வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
குறித்த சட்டத்தரணி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளதாகப் பொலிஸார் நீதிமன்றில் விடயங்களைத் தெளிவுபடுத்துகையில் குறிப்பிட்டனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதில், போலி தேசிய அடையாள அட்டையொன்றைச் சமர்ப்பித்தே இந்த வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெருமளவான பணம் பரிமாற்றப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்ததாக "அத தெரண" நீதிமன்றச் செய்தியாளர் தெரிவித்தார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கவனத்திற் கொண்ட நீதவான், இந்த வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அதன் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிக்கையிடுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.




.jpeg)







