மீட்டர் வட்டி விவகாரம் ; கத்தி முனையில் முச்சக்கர வண்டி கடத்தியவர் கைது !


யாழ். சுன்னாகம் பகுதியில் மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கர வண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

மீட்டர் வட்டிக்கு பணத்தை வழங்கும் ஒருவர் மற்றைய ஒருவருக்கு மீட்டர் வட்டிக்கு பணத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் வாங்கிய பணத்திற்கு மேலாக வட்டி செலுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் தொடர்ச்சியாக வட்டி செலுத்தாத காரணத்தால் வட்டிக்கு பணத்தை கொடுத்தவர் நேற்றிரவு கத்தி முனையில் வட்டிக்கு பணத்தை பெற்றவரது 17 இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கர வண்டியை கத்தியை வைத்து மிரட்டி பறித்து சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.நிதர்சன் தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை குறித்த சந்தேகநபரை கைது செய்ததுடன் முச்சக்கர வண்டியையும் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் மீட்டர் வட்டி பிரச்சினை தலைவிரித்து ஆடுகின்ற நிலையில் ஏற்கனவே தற்கொலைகள், அச்சுறுத்தல் சம்பவங்கள், வன்முறை சம்பவங்கள் என்பன இடம்பெற்றுள்ளன.

இந்த சூழ்நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள தமிழ் பொறுப்பதிகாரி மீட்டர் வட்டி வன்முறை சம்பவம் குறித்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபடுவதை மக்கள் பாராட்டி வருகின்றனர்