அரசியல் காட்டுமிராண்டிகள் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கு இடமளிக்க முடியாது - பிமல் ரத்நாயக்க !


அரசியல் காட்டுமிராண்டிகள் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கு இடமளிக்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் முதலில் பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளை கற்க வேண்டும். போதைப்பொருள் பாவனை தொடர்பில் பரிசோதிக்கும் நடமாடும் பேருந்து சேவையை பாராளுமன்றம் பக்கம் வர சொல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது என சபை முதல்வரும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் மீதான விவாதம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

எதிர்க்கட்சித் தலைவர் முதலில் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை கற்க வேண்டும். காலையிலேயே ஏதாவதொன்றை குறிப்பிட்டுக் கொண்டு சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கிறார். முன்வைக்கப்படும் விடயம் குறித்து விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் தெளிவுப்படுத்தல்களை முன்வைத்ததன் பின்னரும் குளறுபடிகளையே ஏற்படுத்துகிறார்.

அரசியல் காட்டுமிராண்டிகளின் முறையற்ற செயற்பாடுகளுகளால் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்க இடமளிக்க முடியாது. பாராளுமன்ற உறுப்புரிமையை காசுக்கு விற்பனை செய்தவர்கள் இன்று சபை ஒழுக்கம் பற்றி பேசுகிறார்கள்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதில் காணப்பட்ட முறைகேடுகள் அண்மையில் வெளியிடப்பட்ட புதிய ஒழுங்கு விதிகள் ஊடாக திருத்திக் கொள்ளப்பட்டுள்ளன.சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தி வாகனங்களை செலுத்துவதால் தான் அதிகளவிலான விபத்துகள் இடம்பெறுகின்றன.

பொதுப்போக்குவரத்து சேவையை பாதுகாப்பானதாக மாற்றியமைப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.பொதுப்போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.

பொதுப்போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகள் போதைப்பொருட்களை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். இதனை கண்டறிவதற்கு நடமாடும் போதைப்பொருள் பரிசோதனை பேருந்து சேவை தற்போது ஈடுபடுத்தப்படுகிறது. இந்த பேருந்தை பாராளுமன்றம் பக்கம் வர சொல்லலாம். ஏனெனில் ஒருசிலர் போதைப்பொருள் பயன்படுத்தியதை போன்று செயற்படகிறார்கள் என்றார்.