கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தில் இவ்வருடத்தின் முதலாவது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று (16) பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு, பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத், பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள், திணைக்களத் தலைவர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரச அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

2025 ஆம் ஆண்டின் அபிவிருத்தித் திட்ட முன்னேற்றங்கள் மதிப்பீடு செய்யப்பட்டதுடன், 2026 ஆண்டிற்கான உட்கட்டமைப்பு, வீதி, குடிநீர், வீடமைப்பு, பாசன மற்றும் கட்டிட அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதோடு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் காட்டு யானை தாக்குதல் கட்டுப்பாடு தொடர்பாக அதிகாரிகளுக்கு வழிமுறைகள் வழங்கப்பட்டன.

மேலும் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட விடயங்கள் குறித்து பிரதேசத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன், எதிர்கால திட்டங்களை விரைவுபடுத்துவதற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.