நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை நிறுத்திவிட்டதாக அரசாங்கம் மார்தட்டிக்கொண்டாலும், ஜனாதிபதி வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே பட்டப்பகலில் படுகொலைகள் அரங்கேறுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் பாராளுமன்ற உனறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லஙகா பொதுவான பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், கடந்த காலங்களில் 'தினசரி துப்பாக்கிச் சூடுகளை தடுத்துவிட்டோம்' என அமைச்சர்கள் கூறி வந்த நிலையில், தற்போது ஜனாதிபதி வசிக்கும் பெலவத்தை பகுதியிலேயே தனது மனைவியுடன் சென்ற சட்டத்தரணி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதியின் வீட்டின் முன்னாலேயே ஒரு சட்டத்தரணிக்கு பாதுகாப்பு வழங்க முடியாவிட்டால், இந்த நாட்டில் சாதாரண குடிமகனின் பாதுகாப்பு நிலை குறித்து எதனைப் பேசுவது என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், அரசாங்கம் தற்போது திட்டமிட்ட முறையில் சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகச் சாடிய நாமல் ராஜபக்ஷ, வைத்தியர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடினால் மக்கள் அவர்களுக்கு எதிராகத் தீர்மானம் எடுப்பார்கள் என சுகாதார அமைச்சர் அச்சுறுத்துவது, மக்களைத் தூண்டிவிட்டு வைத்தியர்கள் மீது தாக்குதல் நடத்தும் ஒரு சூழ்ச்சி எனத் தெரிவித்தார். அண்மைக் காலங்களில் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே கொலைகள் நடப்பதையும், சட்டத்தரணிகள் தாக்கப்படுவதையும் சுட்டிக்காட்டிய அவர், இவை அனைத்தும் நீதித்துறை மற்றும் சட்ட ஒழுங்கின் வீழ்ச்சியைக் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலை தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பை அரசாங்கத் தரப்பினர் விமர்சிப்பதன் மூலம், கொலையாளிகளைப் பாதுகாக்கவும் அராஜகத்தை நியாயப்படுத்தவும் அரசாங்கம் முயல்வதாக அவர் குற்றம் சுமத்தினார். கஞ்சா தோட்டங்களை முற்றுகையிடச் செல்லும் பொலிஸாரைத் தாக்கும் பின்னணியைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபையில் உள்ளதாகவும், 88-89 காலப்பகுதியில் வன்முறை அரசியலில் ஈடுபட்டவர்களே இன்று ஆட்சியில் இருப்பதால் அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி அடக்குமுறை மட்டுமே என்றும் அவர் கூறினார். வைத்தியர்களையும், சட்டத்தரணிகளையும், வர்த்தகர்களையும் பயமுறுத்தி ஆட்சியைத் தொடரலாம் என அரசாங்கம் நினைத்தால் அது ஒருபோதும் வெற்றி பெறாது எனவும் நாமல் ராஜபக்ஷ மேலும் வலியுறுத்தினார்.





.jpeg)





.jpeg)

